சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்; இன்று 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்று 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த 16ம் தேதி முதல் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வரும் நவம்பர் 30ம் தேதி வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் நேற்று வரை 4.50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று 66 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் மிக அதிக அளவில் சபரிமலையில் குவிந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது தரிசனத்திற்காக பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று 92 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள்  முன்பதிவு செய்துள்ளனர். காலை 10 மணியளவில் 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனிக்கிழமை என்பதால் இதில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜைகளில் கட்டுப்பாடு

* சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பூஜைகளில் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் மகர விளக்கு வரை சகஸ்ரகலச வழிபாடு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.

* இந்த வழிபாட்டுக்காக பூஜை செய்யப்பட்ட கலசங்களை கோயிலுக்கு கொண்டு செல்லும் வழியில் பக்தர்கள் குறுக்கே செல்லக்கூடாது. இதனால் பக்தர்களை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

* தற்போது அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால் இதன் மூலம் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும். இதனால் மகரவிளக்கு வரை சகஸ்ரகலச வழிபாட்டை  நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் அஷ்டாபிஷேகம் ஆகியவை மட்டுமே மகரவிளக்கு முடியும் வரை நடத்தப்படும்.

Related Stories: