போலீஸ் எஸ்ஐ-யிடம் மோதல்; காங். மாஜி எம்எல்ஏ கைது: டெல்லி போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் போலீஸ் எஸ்ஐ-யுடன் தகராறு செய்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கானை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கான், மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. மேலும் அவர் ஷாஹீன் பாக் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆசிப் கான் மீது ஐபிசியின் 186 மற்றும் 353 பிரிவுகளின் கீழ் ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ஈஷா பாண்டே கூறுகையில், ‘காங்கிரஸ் வேட்பாளரான அரிபா கானின் தந்தையான முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கான், தைய்யப் மசூதிக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்ஷய், தேர்தல் பிரசாரம் செய்ய முன் அனுமதி வாங்கினீர்களா என்று ஆசிப் கானிடம் கேட்டார். அதற்கு அவர், போலீஸ் எஸ்ஐயிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அதையடுத்து ஆசிப் கான் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Related Stories: