குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தும் ரூ13.5 கோடி மதுபானம் பறிமுதல்; 24,170 பேர் கைது: தேர்தல் அதிகாரிகள் தகவல்

காந்திநகர்: குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் ரூ.13.51 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் 24,170 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத்தில் சட்டப் பேரவை முதற்கட்ட ேதர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில வாரங்களாக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  91,154 பேர்  தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட காவல்துறை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.10.49 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் நவம்பர் 3ம் தேதி அமலானது முதல், நவம்பர் 25 வரை, ரூ. 4.01 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 6.48 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ. 61 கோடி மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் 29,800க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.13.51 கோடி மதிப்புள்ள மதுபானங்களுடன் 24,170 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்றனர். குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் மதுபான சப்ளை மற்றும் அதுதொடர்பாக மதுபான பறிமுதல், கைது நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: