திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சேதமான சாலையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அவற்றை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் நகர் சாலை உள்ளது. இதன் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்திய மழையால் சேதமான சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், சில நேரங்களில் தடுமாறி விழுந்து அடிபடுகின்றனர்.

சீருடைகள் சேதமாவதுடன் காயமும் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களும் மேடுபள்ளங்களில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், சேதமான சாலையையொட்டி, ரயில்வே துறைக்கு சொந்தமான மழைநீர் குட்டை உள்ளது. இதன் வழியாக நடந்து செல்பவர்கள் மீது மழைநீர் தெறிப்பதை தடுக்க முயற்சிக்கும்போது அந்த குட்டையில் விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த சேதமான சாலையை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: