வலுவான இங்கிலாந்துடன் டிரா செய்த அமெரிக்கா

தோகா: 22வது பிபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. நேற்றிரவு 12.30 மணிக்கு அல் பேட் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்த போட்டியில், குரூப் பி பிரிவில் தரவரசையில் 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்கா (16வது ரேங்க்) அணிகள் மோதின. இங்கிலாந்து முதல் போட்டியில் ஈரானை 6-2 என வீழ்த்திய உற்சாகத்திலும், அமெரிக்கா முதல் ஆடடத்தில் வேல்சுடன் டிரா செய்ததால் கட்டாய வெற்றி நெருக்கடியிலும் களம் இறங்கின. ஆட்டம் தொடங்கியது முதலே ஈரான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியா இது என்று அதிர்ச்சியை ஏற்படுத்துவது போல் களத்தில் செயல்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே அமெரிக்கா கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தது. இதன் பலனாக அடுத்தடுத்த நிமிடங்களில் கார்னர் வாய்ப்புகளை பெற்றது. ஆனால் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை அமெரிக்காவின் மெக்கன்னி இருமுறை தவறவிட்டார். 75 நிமிடங்கள் கடந்தும் ஆட்டத்தில் கோல் அடிக்கப்படாததால், போட்டி பரபரப்பானது.

ஹெண்டர்சன், ராஷ்போர்டு உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து அணியில் இணைந்த பின்னர் கோல் அடிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கடைசி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து கூடுதல் நேரமாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் இங்கிலாந்துக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோல் அடிக்கவில்லை. இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் டிராவில் முடிந்த 7வது போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்று என கணிக்கப்பட்டுள்ள பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் டிராவை செய்ததை அமெரிக்கா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக இதே பிரிவில் மாலை 6.30 மணிக்கு நடந்த போட்டியில் ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இதே பிரிவில் கடைசி லீக் போட்டிகளில் இங்கிலாந்து வரும் 30ம் தேதி வேல்ஸ் அணியையும், ஈரான்-அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

வாழ்வா-சாவா நெருக்கடியில் அர்ஜென்டினா

உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, சி பிரிவில் தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்று இரவு வாழ்வா-சாவா நிலையில், 13வது ரேங்க் மெக்சிகோவுடன் மோதுகிறது. கேப்டன் மெஸ்சிக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் அணியை ரவுண்ட் 16 சுற்றுக்கு கொண்டு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தோல்வி அடைந்தால் லீக் சுற்றுடன் நடையை கட்டவேண்டியது தான். இதேபோல் மெக்சிகோ முதல் போட்டியில் போலந்துடன் டிரா செய்ததால் அந்த அணியும் கட்டாய வெற்றி நெருக்கடியில் உள்ளது.

Related Stories: