கலவை பேருந்து நிலையத்தில் காலாவதியான பொருட்களை விற்ற பேக்கரி உரிமையாளருக்கு சுகாதார துறையினர் எச்சரிக்கை

கலவை :  கலவை பேருந்து நிலையத்தில் காலாவதியான பொருட்களை விற்ற  பேக்கரி கடை உரிமையாளருக்கு சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா உட்பட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருட்கள்  உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறதா  என கடைகளில் நேற்று திமிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  ராஜேந்திரன், தலைமையில் சுகாதார ஆய்வாளர் அருண், சூரியராஜ் ஆகியோர்    ஆய்வு செய்தனர்.

அப்போது, பேருந்து நிலையத்தில் பங்கடை அருகே புகைப்பிடிக்க அனுமதித்த கடை உரிமையாளர்களுக்கு தலா  ₹100 வீதம் ₹700 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து பொதுமக்கள் சிலர் சுகாதாரத்துறையிடம் பல்வேறு கடை மற்றும்  பேக்கரிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறினர்.

இதையடுத்து, திமிரி வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அருண், சூரிய ராஜ் ஆகியோர் கலவை பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி கடைக்குச் சென்று பல  பொருட்களை எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் காலாவதியான பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர், பேக்கரியில் காலாவதியான பொருட்களை  அப்புறப்படுத்த வேண்டும் தொடர்ந்து. இதேபோல் பொருட்களை விற்றால் கடைக்கு சீல் வைக்க நேரிடும் என எச்சரித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் அடிக்கடி  சோதனை செய்வதில்லை, அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே அதிகாரிகள் இப்பகுதிக்கு வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருப்பதால் அதிகாரிகள் வருவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: