நகர்ப்புறத்தைஒட்டியுள்ள பலருக்கு வரவில்லை பி.எம்.கிசான் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி

சேலம் : சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ மேனகா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை குறித்து மனு அளித்தனர். கூட்டத்தில், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் பேசுகையில், ‘‘பட்டா மாற்றங்களுக்கு வருவாய்த்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மின் இணைப்பு பெற்ற பலர் தற்போது இறந்துவிட்டனர். அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறாத நிலை தான் உள்ளது. எனவே, அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் குடும்பத்தினருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும்,’’ என்றார்.

தலைவாசல் வெள்ளையூரைச் சேர்ந்த பெரியதுரை பேசுகையில், ‘‘அரசு அலுவலகங்களில் லஞ்சஒழிப்பு துறை குறித்து விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,’’ என்றார். கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பேசும்போது, ‘‘35 ஆண்டுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பட்டா மாற்றத்தில், பலரது பெயர்கள் மாறி இடம்பெற்றுள்ளன. இதனை முறையாக விசாரித்து, பெயர் மாற்ற முகாம் நடத்த வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தில் ஆதார் பதிவு மேற்கொள்ள, கிராம சேவை மையங்களில் ₹200 வரை பெறப்படுவது குறித்து விசாரிக்க வேண்டும். ஏற்கனவே பணம்கட்டி, முன்பதிவு செய்த விவசாயிகளை கண்டுகொள்ளாமல், விடுமுறை தினங்களில் தனிநபர்களுக்கு சர்வேயர்கள் அளவீடு பணி மேற்கொள்வதை விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

புளியங்குறிச்சியைச் சேர்ந்த பெருமாள் பேசுகையில், ‘‘ஆணையம்பட்டி தடுப்பணையின் மட்டத்தை ஒரு அடி உயர்த்தினால், சுற்றியுள்ள 4 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தனியார் பள்ளி, கல்லூரிகளின் பஸ், வேன்கள் மின்னல் வேகத்தில் செல்வதால், விபத்து அபாயம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி கட்டுப்பாடு விதிக்க வேண்டும்,’’ என்றார். சேலம் அடுத்த தாதம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் பேசும்போது, ‘‘ஒன்றிய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

குறிப்பாக, நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, நடப்பு தவணைத்தொகை வரவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அயோத்தியாபட்டணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்ட இடம் ஒதுக்க வேண்டும். கடந்த 2020, 2021ம் ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. கால்நடைகளுக்கான காப்பீட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்,\” என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து, டிஆர்ஓ மேனகா பேசுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் 1,74,890 எக்டர் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நடப்பாண்டில் நெல் 240 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 96 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 428 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 307 மெட்ரிக் டன்னும் மற்றும் பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வேளாண் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் புருசோத்தமன், துணை இயக்குநர்கள் வேளாண்மை சீனிவாசன், தோட்டக்கலை தமிழ்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை-பொ) கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: