×

சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்திற்கு ₹80 கோடி செலவு செய்தால் 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர்-குழுவின் ஆய்வு அறிக்கையில் தகவல்

சேலம் : சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்திற்கு ₹80 கோடி மட்டும் கூடுதலாக செலவு செய்தால், 60 வார்டுக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கலாம் என சீரான குடிநீர் விநியோகிப்பதற்கான குழுவினரின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மேயர் ராமச்சந்திரன், கடந்த செப்டம்பர் மாத மாமன்ற கூட்டத்தில் உத்தரவிட்டார். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் உள்ள பிரச்னைகளை தீர்க்க விரிவான ஆய்வறிக்கையை தயாரித்து அளிக்கும்படி, சூரமங்கலம் மண்டலக்குழு தலைவர் கலையமுதன் தலைமையில் குழுவை அமைத்தார்.

சேலம் மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிப்பதற்கான குழுவில், துணைத்தலைவர்களாக மண்டலக்குழு தலைவர்கள் உமாராணி, தனசேகர், அசோகன் ஆகியோரும், உறுப்பினர் செயலராக மாநகர பொறியாளர் ரவியும், உறுப்பினர்களாக திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக கவுன்சிலர்கள் என்று மொத்தம் 24 பேர் இடம் பெற்றனர். இக்குழுவினர், சேலம் தனிக்குடிநீர் திட்டம், நங்கவள்ளி குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற குடிநீர், அதன் விநியோக தன்மை, பணியாளர்களின் எண்ணிக்கை, மக்களுக்கு சீரான குடிநீரை வழங்க செய்ய வேண்டிய பணிகள் என அனைத்துவிதமாகவும் கள ஆய்வு நடத்தியது.

இதையடுத்து அக்குழுவின் சார்பில் நேற்று, மாநகராட்சி கூட்டத்தில் ஆய்வறிக்கையை குழுவின் தலைவர் கலையமுதன், மேயர் ராமச்சந்திரனிடம் வழங்கினார். அனைத்து கவுன்சிலர்களுக்கும் அவ்வறிக்கை வழங்கப்பட்டது. அந்த அறிக்கையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் மூலம் தினமும் 150 மில்லியன் லிட்டர் குடிநீரும், நங்கவள்ளி திட்டம் மூலம் 14 மில்லியன் லிட்டர் குடிநீரும் கிடைக்கிறது. மாநகராட்சியில் உள்ள 4 மண்டலத்திலும் 1,17,210 வீட்டு குடிநீர் இணைப்பும், 463 வணிக ரீதியான இணைப்பும், 145 அரசு கட்டிட இணைப்பும், 115 கல்வி நிலையங்கள் இணைப்பும், 6,420 பொது குடிநீர் இணைப்பும் என ஒட்டுமொத்தமாக 1,24,353 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்புகள் மூலம் சுமார் 10 லட்சம் மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர்.

மாநகராட்சிக்கு தற்போது கிடைக்கும் 164 மில்லியன் லிட்டர் குடிநீர் மூலம் ஒரு நபருக்கு 164 லிட்டர் குடிநீரை வழங்கிட முடியும். 2 நாட்களுக்கு ஒருமுறை என்றால், ஒருநபருக்கு 328 லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மிக சரியான முறையில் சேலம் மாநகருக்கு கொண்டு வரப்படுகிறது. தொட்டில்பட்டி, கோம்புரான்காடு, நங்கவள்ளியில் உள்ள குடிநீர் திட்ட மையங்களில் ஆய்வு செய்ததில், அங்கு பணியாற்றும் 44 பணியாளர்களும் மிக சிறப்பாக பணியாற்றி, மாநகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீரை வழங்குகிறார்கள்.

சேலம் மாநகருக்குள் வந்து சேரும் தண்ணீர் 4 பிரிவுகளாக பிரிந்து 57 குடிநீர் தொட்டிகளை நிரப்புகிறது. அந்த பிரிவு பகுதிகளில் மீட்டர் மற்றும் சென்சார் அமைத்திட வேண்டும். அப்படி செய்தால்  தான், மேட்டூரில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட இயலும். மேலும், இந்த விநியோக பணியை மாநகராட்சி சார்பில் கண்காணிக்க உதவி பொறியாளர் அந்தஸ்தில் 4 அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், அந்தந்த பிரிவுகளில் மீட்டர் பொருத்தி கண்காணிப்பதை தினமும் கணினி மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கும், மண்டலக்குழு தலைவர்களுக்கும் தெரிவிக்கச் செய்திட வேண்டும். அப்படி செய்யும்போது, விநியோகம் முறைப்படுத்தப்படும். அதேபோல், தனிக்குடிநீர் திட்டத்திற்கு அஸ்தம்பட்டி சாரதா கல்லூரிச்சாலையில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் அழுத்தம் தாங்காது என்பதால், மேட்டூரில் இருந்து 135 மில்லியன் லிட்டர் மட்டும் அனுப்ப அதிகாரிகள் கூறுவதை அறிய முடிகிறது. அந்த குழாயை சீரமைக்க நவீன முறையை பின்பற்றலாம் அல்லது நகரமலை அடிவாரம் வழியே புதிய குழாய் பதித்து கொண்டு வரலாம். அதற்கான செலவை நடப்பு மற்றும் வரும் நிதியாண்டின் நிதியின் மூலம் மேற்கொள்ளலாம்.

தற்போது உள்ள தனிக்குடிநீர் திட்டத்திற்கு ₹80 கோடி ஒதுக்கீடு செய்து பணியை மேற்கொண்டால், கூடுதலாக 20 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும். அதன்மூலம் 60 வார்டுக்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்திட முடியும். 24/7 என்ற அடிப்படையில் தினசரி கூட குடிநீர் வழங்க வாய்ப்பு இருக்கிறது. சீரான குடிநீர் விநியோகத்திற்கு தனியார் பரிந்துரைபடி ₹800 கோடியில் திட்டம் தயாரித்து நிறைவேற்றுவதை பொறுத்திருந்து முடிவு எடுக்கலாம் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Salem Corporation , Salem: If the Salem Corporation spends only ₹80 crore more on the separate drinking water project, drinking water will be provided to 60 wards every 2 days.
× RELATED சேலம் மாநகராட்சி செட்டிசாவடி குப்பை...