ஆனைமலையில் ஆண்டுக்கு 2 போக நெல் சாகுபடி குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்படுமா?

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில், ஆண்டுக்கு இரண்டுபோக நெல் சாகுபடியால், மானியத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம்  வழங்க, வேளாண்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.  இதில் ஆனைமலை, கோட்டூர், கோபாலபுரம், அம்பாராம்பாளையம், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர், தென்சங்கம்பாளையம், காளியாபுரம், ஒடையகுளம், சேத்துமடை  உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடியில்  விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டுபோக நெல்  சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆண்டில் கடந்த மே மாதம் 17ம் தேதி, பழைய ஆயக்கட்டு பகுதிகளான ஆனைமலை மற்றும் பள்ளி விலங்கன், அரியாபுரம், காரப்பாடி, பெரியணை, வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஆழியார் அணையிலிருந்து தண்ணிர் திறக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் இறுதி முதல்  அப்பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மட்டுமின்றி, வாழை மற்றும் நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டது.

ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கடந்த, ஜூன் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட முதல்போக சம்பா குறுவை நெல், கடந்த அக்டோபர் மாதம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. பல இடங்களில் நெல்மணிகள் முதிர்ந்து  தலைதொங்கியது போல் இருந்ததால்,  முதிர்ந்திருக்கும்  நெல் மணிகளை, அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் இறங்கினர். இருப்பினும், நெல் அறுவடைக்கு கூலியாட்கள் பற்றாக்குறையால் பல இடங்களில், அறுவடை செய்ய இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், வேளாண்துறை சார்பில் குறைந்த வாடகையில் கொடுக்கப்படும் கதிர் அறுக்கும் இயந்திரம் இந்த ஆண்டில் பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு கிடைக்க பெறவில்லை எனறு கூறப்படுகிறது. இதனால், தனியாரிடமிருந்தே கூடுதல் வாடகை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக விவசாயிகளின் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய நெல் அறுவடை இயந்திரம் இல்லாதததால்,  பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில், நெல் அறுவடை பணி இன்னும் தாமதமாவதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து, பழைய ஆயக்கட்டு பாசன பகுதி விவசாயி பட்டீஸ்வரன் என்பவர் கூறுகையில், ‘ஆனைமலை பகுதியில், பழைய  ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் ஆண்டிற்கு இரண்டு முறை  சாகுபடி செய்யும் நெல், குறிப்பிட்ட மாதங்களில் அறுவடை செய்யது,  விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற வேதனை ஏற்படுத்துகிறது. இதனாலே, அரசு கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.

 ஆனால், வேளாண்துறை மூலம் குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரம், கடந்த சில ஆண்டுகளாக வழங்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  இதனால், ஒவ்வொரு ஆண்டும், நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த ஆண்டிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் நெல் அறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்துக்கு ரூ.1300 என்ற விகிதத்திலேயே வழங்கப்படுகிறது.

ஆனால், ஆனைமலையில் ஒரு மணி நேரம் நெல் அறுவடை இயந்திரத்துக்கு ரூ.2600 வரை செலவாகிறது. தனியாரிடம் இருந்து கூடுதல் வாடகைக்கு பெற வேண்டியதாக உள்ளது. இந்த நிலை நீடித்ததால், நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உரிய லாபமின்றி போவார்கள். எனவே, வருங்காலங்களில் மீண்டும் வேளாண்துறை மூலம் குறைந்த வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: