போக்குவரத்து துறை சார்பில் மகளிருக்கு இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி-முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி :  புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் மகளிருக்கான இலவச மின்சார ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.  புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை பெண்களின் நலன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பழகுநர், ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெண்கள் ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவது அதிகரித்து வருகின்றது. புதுவை அரசு மகளிருடைய சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் மகளிருக்கான இலவச மூன்று சக்கர மின்சார வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குவதற்கான துவக்க விழா நேற்று சட்டசபை வளாகத்தில் நடந்தது.

 விழாவுக்கு போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தாராம ராஜூ, பிரபாகர ராவ், கலியபெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

 இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இன்றைய கால கட்டத்தில் கடினமான தொழில்களுக்கு வர பெண்களிடையே தயக்கம் நிலவினாலும் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் ஆட்டோ தொழிலில் அதிக அளவு ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஓட்டுநர் பயிற்சி மையம் இல்லாததால் ஆட்டோ தொழிலில் ஆர்வம் இருந்தும் கூட பல பெண்கள் பயிற்சி பெறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

 எனவே, அரசு பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மையம் ஏற்படுத்தி கொடுக்கும் பட்சத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு முன் வருவார்கள். மேலும் அதிக பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலில் ஈடுபடும்போது சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். மேலும் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்றார்.

Related Stories: