அதிமுக ஆட்சியில் பலகோடி ‘ஸ்வாகா’ வாய்க்கால், குளக்கரைகள் புனரமைப்பதில் முறைகேடு-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

கம்பம் :  அதிமுக ஆட்சியில் கம்பம் பகுதியில் வாய்க்கால் மற்றும் குளக்கரை பணிகளில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டப்பாட்டில் உள்ள கண்மாய்கள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், லோயர் கேம்ப்பிலிருந்து, பழனிசெட்டிபட்டி வரை உள்ளது. இதில் கம்பம் நகரின் கிழக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக வீரப்பநாயக்கன்குளம், ஒட்டுகுளம், உடப்படிகுளம் என்ற 3 குளங்கள் உள்ளன. கம்பம் நகரம் பாளையக்காரர்களின் ஆளுமைக்கு உட்பட்ட ஊர் என்பதற்கு அடையாளமாக இன்னும் இருப்பது இந்த வீரப்பநாயக்கன் குளம்தான்.

இந்த குளங்களின் தண்ணீர் மூலம் பலநூறு ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இக்குளங்களில் முல்லை பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக கம்பம் நகரின் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இக்குளத்தில் சேர்கிறது. பலஆண்டுகளாக இவை புனரமைக்காமலும், கரைகள் பலப்படுத்தாமலும் இருந்தது. மழைக்காலம் வந்ததும் மழைத்தண்ணீரால் கரைப்பாதை முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டு, விளைநிலத்திற்கு விவசாயிகளின் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் குளத்தின் கரையை விவசாய பயன்பாட்டிற்கு வாகனங்கள் செல்லும் வகையில் சமப்படுத்தவும், பலப்படுத்தவும்கோரி அதிமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உலக வங்கி நிதி 13 கோடியில், தேனி மாவட்டத்தில் 20 கண்மாய்கள் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணியாக தடுப்பணைகள், குளம் மற்றும் வாய்க்கால்களின் கரைகளை அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் பணிகள் செய்ய முடிவு செய்து 2019ல் பணிகளை தொடங்கியது.   

வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டுக்குளம், சின்னவாய்க்கால், ஒடப்படி குளம் கரையை பலப்படுத்தவும், உயரப்படுத்தவும், குளங்களில் தூர்வாரிய மண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பணிகள் தொடங்கியபோது மழை தொடங்கியதாலும், கண்மாயின் ஒருபகுதியில் தண்ணீர் இருந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. மழையால் கரைப்பாதை முழுவதும் மண் அரிப்பு ஏற்பட்டது.

உடனடியாக விவசாயிகளை ஏமாற்ற அவசரகதியாக கரைப்பாதையில் செம்மண் மட்டும் போடப்பட்டது.இந்நிலையில் இந்த குளக்கரைகள் கடந்த மாதம் மழையால் சேதமடைந்து, விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு வாகனங்களை கொண்டு சென்று முதல்போக அறுவடைப்பொருட்களை கொண்டுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. கம்பத்தில் உள்ள வீரப்பநாயக்கன் குளக்கரைகளில் தார்ரோடு அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் வாய்க்கால் பணி மற்றும் குளக்கரை பணியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த 2017- 18 ல் அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை தொகுப்பு எண் 1 மற்றும் 2 ல் உலக வங்கி நிதி 6 கோடியே 30 லட்சம் மற்றும் ரூபாய் 6 கோடியே 71 லட்சத்து 70 ஆயிரம் உதவியுடன் தேனி மாவட்டம் சுருளியாறு உபவடிநிலம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 15 கண்மாய்கள், தேனி தாலுகாவில் உள்ள 5 கண்மாய்கள் என 20 கண்மாய்கள் புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணியாக தடுப்பணைகள், வாய்க்கால்களின் கரைகளை அகலப் படுத்துதல் மற்றும் பலப்படுத்தும் பணிகள் செய்ய முடிவு செய்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் செய்தனர். முறையாக இந்த பணிகள் செய்யாமல் இதில் பலகோடிருபாய் முறைகேடு செய்ததால் பணி முழுமைபெறாமல் போனது’’ என்றனர்.

ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை

கூடலூர் நகராட்சியின் மத்திய பகுதியில் ஒட்டான்குளம் என்றழைக்கப்படும் மைத்தலை மன்னாடிகுளம் கண்மாய் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சேதமடைந்த ஒட்டான்குளம் கரையவழியாக வாகனங்களில் விளைபொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்வது விவசாயிகளுக்குமிகவும் சிரமமாக இருந்ததால் ஓட்டான்குளம் கரையை தார்சாலையாக மாற்ற இப்பகுதி விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

னால் அப்போதைய அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயிகள் கூடலூர் திமுக நகர்மன்ற தலைவரிடம் இந்த கோரிக்கையை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜூலை மாதம் கூடலூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒட்டான்குளம் கரையில் ரூபாய் 50 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: