பாரம்பரிய வெண்ணெய் விற்பனை சரிவு-உற்பத்தியாளர்கள் வேதனை

காங்கயம் : இந்தியா அளவில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் விற்பனையையும் விலையினையும் சரிக்கும் வகையில் பரவும் தவறான தகவலால் ஊத்துக்குளி எருமை வெண்ணை விற்பனை சரிந்துள்ளதாகவும், அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால்,அதிக விலைக்கு க்ரீம் வாங்கி வெண்ணை தயாரிக்க வேண்டியுள்ளதால் புகழ் பெற்ற வெண்ணெய் உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தியாகும் வெண்ணெய் உலக பிரசித்தி பெற்றதாகும்.மிகவும் வறட்சி பகுதியான ஊத்துக்குளி மற்றும் காங்கயம் பகுதியில் இருக்கும் விவசாயிகள் வளர்க்கும் மாடு,எருமை  மூலம் பெறப்படும் பாலில் இருந்து வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்ப பட்டு வருகிறது.மேலும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரயில் மூலம் தினமும் தயிர் வெண்ணெய் ஆகியவையும் அனுப்பபடுகிறது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 3.65 லட்சம் மாடுகளும், 48 ஆயிரம் எருமைகளும் உள்ளது. இதன் முலம் உற்பத்தியாகும் பால் மாவட்டத்தில் உள்ள 450 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் நாளொன்றுக்கு 28 லட்சம் லிட்டர் வரை ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு 30 பால் குளிரூட்டும் நிலையங்களில் சேமிக்கப்பட்டு பின் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் கறவை மாடுகள் மற்றும் எருமைகள் அதிக அளவில் ஊத்துக்குளி தாலூகா பகுதியில் அதிக அளவில் விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது.மேலும் வறட்சி பகுதியாக உள்ள ஊத்துக்குளி சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும் பாலில் இருந்து தயார் செய்யப்படும் பசு மற்றும் எருமை வெண்ணையில் கொழுப்பு, புரோட்டீன் சதவீதம் அதிக அளவில் இருப்பதும்,இப்பகுதியில் நிலவும் காலநிலை காரணமாகவும் ஊத்துக்குளி, காங்கயம் வெண்ணெய்  தரமானதாக கெடாமல் இருக்க காரணம். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவலால் ஊத்துக்குளிக்கே உரிய பாரம்பரிய எருமை வெண்ணை உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

எருமை வெண்ணெய் (வெள்ளை) மற்றும் அதில் தயாராகும் நெய்யினை சாப்பிட்டால் அதிக கொழுப்பு தன்மை காரணமாக மாரடைப்பு போன்ற நோய் ஏற்படும் எனவும், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் எனவும்,மந்தமான நிலைக்கு உடல் பழகிவிடும் என்பதால் அதனை உண்பது தவறு எனும் ரீதியில், அறிவியலுக்கு புறம்பான பல கட்டுக்கதைகளை அடித்து விடும் பொய்யான தகவலை பார்த்து விட்டு பலரும் எருமை வெண்ணெய், நெய்யை தவிர்த்து, மாட்டு வெண்ணெய் நெய்யை வாங்கி செல்கின்றனர். இதனால் தற்போது மாட்டு வெண்ணெய்- நெய் விலை,எருமை வெண்ணெய்-நெய்யை விட அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது.

இதன் காரணமாக கடந்த 6 மாதத்தில் பாசு வெண்ணை விலை ரூ.100 வரை அதிகரித்து விற்பனையாகிறது  என ஊத்துக்குளி பகுதியை சார்ந்த வெண்ணெய்  உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்தியாவில் இருந்து இந்த கால கட்டத்தில் அதிக பால் பொருட்கள் குறிப்பாக எருமை வெண்ணை ஏற்றுமதி அதிகரித்து இருப்பது APEDA (Agricultural and Processed Foods Export Development Authority) தரவுகள் மூலம் உறுபடுத்த முடிகிறது.

இதன்படி பால் பொருட்கள் ஏற்றுமதி 201 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது,392 மில்லியன் அமெரிக்க டாலராகவும்,வெண்ணெய் ஏற்றுமதி 2020-21 ல் 4449 டன்னாக இருந்தது,2021-22 நிதியாண்டில் மூன்றரை மடங்கு அதிகரித்து 19954 டன் வெண்ணெய்  ஏற்றுமதியாகி உள்ளது. பால் பவுடர் ஏற்றுமதி இந்த நிதியாண்டில் (2022) 44285 டன் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை காட்டிலும்  மூன்று மடங்கு அதிகமாகும்.

இதேபோல் நெய் ஏற்றுமதி கடந்த ஆண்டுகளை விட 10 சதவீதம் அதிகரித்து 10,689 டன்னாக உள்ளது. இந்தியாவில் இருந்து பால் பொருட்களை அதிக அளவு இறக்குமதி செய்த நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,பக்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இதே போல் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு இந்தியாவில் இருந்து திடீரென பால் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க காரணம் ரஷ்யா-உக்ரைன் போரால் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம்.

மேலும் இந்த போர் ஆரம்பித்த காலகட்டத்தில் இங்கிருந்து பால் பொருட்கள் ஏற்றுமதி அதிகமானதால் உள்ளூர் தயாரிப்பு விற்பனைக்கு பால் தட்டுப்பாடும் நிலவியுள்ளது. தற்போது தமிழக அரசு பால் உற்பத்தி யாளர்களுக்கு பால் விலையை ரூ.3 வரை உயர்த்தி கொள்முதல் செய்து வருவதால் மற்ற தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை விவசாயிகளிடம் உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெண்ணெய் உற்பத்தி செய்ய தேவையான ஒரு கிலோ க்ரீம்  ரூ.360 முதல் 400 வரை கொள்முதல் விலை வருவதாகவும், டிமான்ட்டை பொறுத்து இதன் விலை நிரந்தரம் இல்லாமல் இருப்பதால், தற்போது ஒரு கிலோ எருமை வெண்ணெய் ரூ.420 முதல் 470 வரையும்,பசு வெண்ணெய் ரூ.460 முதல் 510 வரையும் விற்பனையாகி வருகிறது.

ஒரு லிட்டர் பசு நெய் ரூ.580 முதல் 610 வரை விற்பனையாகிறது. முன்பெல்லாம் மாட்டு வெண்ணெய், நெய்யை விட,எருமை வெண்ணை விலை சற்று அதிகமாகவும், விற்பனையும் அதிக அளவில் நடைபெறும். ஆனால் கடந்த 3 வருடமாக எருமை வெண்ணெய் விற்பனை சரிந்து கலப்பின மாடுகள் மூலம் கிடைக்கும் பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய்-நெய் விற்பனையே அதிகம் இருக்கிறது என ஊத்துக்குளி பகுதி வெண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே எருமை வளர்ப்பு அதிக செலவு பிடிப்பதாக இருப்பதால் விவசாயிகள் அவற்றை வளர்ப்பதை குறைத்து வருவதால் ஊத்துக்குளிக்கே உரிய பாரம்பரிய வெண்ணெய் உற்பத்தி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக இப்பகுதி வெண்ணெய் உற்பத்தியாளர்கள் வேதனையில் உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை சரிவர விசாரிக்காமல் சிலர் பரப்பி வருகின்றனர். எருமை வெண்ணெய்-நெய்யை கிட்டத்தட்ட மக்கள் வாங்குவதையே நிறுத்தி விடும் நிலைக்கு சென்றுள்ளது என கவலையுடன் கூறினர்.

தற்போது பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக வெண்ணை நெய் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Related Stories: