புத்தூர்கட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவலர் அதிரடி சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: வடபழனி ஒட்டகபாளையம் பகுதியை சேர்ந்த சிவசாமி வேலுமணி என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நான், புத்தூர் கட்டு போர்ன் அண்ட் ஜாயின்ட் சென்டர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த ஜூலை மாதம் என் மீது கார்த்திக் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் பொய்யான புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரை அப்போது இன்ஸ்பெக்டராக இருந்தவர் விசாரித்து, முடித்து வைத்தார்.

அதன்பிறகு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் என்னை மீண்டும் அழைத்து, அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். அதுதொடர்பாக, தெற்கு மண்டல இணை கமிஷனரிடம் புகார் அளித்தேன். வடபழனி உதவி கமிஷனர் என்னை விசாரித்தார். பிறகு இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தேன். இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் என்னை பல வகையில் மிரட்டி வந்தார். இதற்கிடையே, கடந்த 12ம் தேதி இன்ஸ்பெக்டர் மேற்சொன்ன கார்த்திக் என்பவர் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினார். பிறகு, தான் அனுப்பும் நபரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து அனுப்பும்படி கூறினார்.

அப்போது  என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். பிறகு மறுநாள் இன்ஸ்பெக்டரின் ஓட்டுனரும், அவருடன் சீருடை அணியாமல் வந்த எஸ்ஐயும் வந்து, என்னை மிரட்டி ரூ.50 ஆயிரம் லஞ்சமாக வாங்கி சென்றனர். பின்னர் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் போனில் என்னை அழைத்து, மீதமுள்ள ரூ.9.50 லட்சத்தை விரைந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை என்ன செய்வேன் என்றே எனக்கே தெரியாது, என்று மிரட்டினார். எனவே என்னை சட்டவிரோதமாக மிரட்டி  பணம் பறித்த வடபழனி இன்ஸ்பெக்டர், அவரது கார் டிரைவர், எஸ்ஐ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் லஞ்சம் வாங்கியதாக  வடபழனி  இன்ஸ்பெக்டரின் கார் ஓட்டுநரான காவலர் திருமலையை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: