குற்றச்செயல் சிசிடிவி பதிவை தெளிவாக காட்டும் புதிய மென்பொருள் கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணும் வகையிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்கள் வரிசையில் சென்னை மாநகரம் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பெற்றுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணவும், போக்குவரத்து விதிகளை மீறியவர்களை கண்டுபிடிக்கவும் சிசிடிவியின் பங்கு முதன்மையாக உள்ளது.

இதனால் கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் சிசிடிவி பெரும் உதவியாக உள்ளது. சில நேரங்களில் குற்றவாளிகள் மற்றும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகனங்கள் சிசிடிவி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டும், புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நிலையை போக்கும் வகையில், சிசிடிவி பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாகனத்தின் பதிவு எண் போன்றவற்றை துல்லியமாக தெளிவாக அடையாளம் காணும் வகையில் சென்னை மாநகர காவல்துறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘சைபர் ஹசகத்தோன்’ என்ற பெயரில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து தெளிவாக காட்சி படுத்தும் புதிய மென்பொருள் உருவாக்க புதிய முயற்சி எடுத்துள்ளார். இதற்காக சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் நபர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் பெயர்கள் அளிக்க வேண்டும்.

பிறகு டிசம்பர் 12ம் தேதி தெளிவுகள் இல்லாத சிசிடிவி பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாகன பதிவு எண்களை, சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களது புதிய மென்பொருட்கள் மூலம் புகைப்படங்களை தெளிவாக காட்டினால், சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. அதை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்க உள்ளார். எனவே, விருப்பம் உள்ள மென் பொறியாளர்கள் இந்த போட்டில் கலந்துகொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்புகளை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் சென்னை மாநகர காவல்துறை சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: