கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தூண்டியவரின் வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி நாளான கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மக்கள் ஒன்று கூட வேண்டும் என்று சமூகவலைதளத்தில் செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக கபாலீஸ்வரர் கோயில் உள்ளே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக  கோயில் செயல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த், சென்னையை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அமைப்பின் நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல், அவதூறு செய்தி பரப்புதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து  செய்ய கோரி டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கோயிலில் நடந்த போராட்டத்தின்போது, குடும்ப திருமண நிகழ்வுக்காக பெங்களூரு சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இல்லாத தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று மக்களை தூண்டும் வகையில் டி.ஆர்.ரமேஷ் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அவர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் இந்த போராட்டத்தை தூண்டும் வகையில் மூலாதாரமாக செயல்பட்டு இருப்பதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றார்.

இதை பதிவு செய்த கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததுடன், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.   

Related Stories: