×

சத்தியமூர்த்தி பவன் அடிதடி விவகாரம்; கையில் எடுக்கும் டெல்லி மேலிடம் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் கார்கே விசாரணை: கே.எஸ்.அழகிரி மீது 72 புகார்கள்

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் நேற்று அகில இந்திய தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமையிடம் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்தது. கே.எஸ்.அழகிரியின் உத்தரவின்பேரில் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த முடிவை எடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, செல்வப்பெருந்தகை, கிருஷ்ணசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.  தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தலைவர் கார்கே இருவரிடமும் புகார்களை தெரிவித்துள்ளனர்.

 இதை தொடர்ந்து தான், ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறானது. இதை நிறுத்தி வைக்கிறோம் என்று தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவசரமாக முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைமையை அவர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரி மீது டெல்லி தலைமைக்கு 72 புகார்களுக்கு மேல் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்னையை டெல்லி தலைமையே விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 அதன்படி, தமிழக மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரை டெல்லிக்கு வர தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அவர்கள் இருவரும் டெல்லியில் நேற்று ஆஜராகினர். அவர்களிடம், கார்கே தனித் தனியாக விசாரணை நடத்தினார். காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபாலும் விளக்கம் கேட்டார்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கட்சி விதிகளை பின்பற்றாமல் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தது ஏன் என்பது குறித்தும் விளக்கம் கேட்டதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு தமிழக காங்கிரசில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காங்., எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்
சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்த பரபரப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 18 எம்எல்ஏக்களில், ஒரு குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அவர்களது திடீர் பயணம் தமிழக காங்கிரசார் மத்தியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் சந்திப்புக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று, செல்வப்பெருந்தகையை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்ற கோரிக்கை வைப்பது, மற்றொன்று கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாக காய் நகர்த்துவது என இரண்டு காரணங்களுக்காக தான் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Sathyamurthi ,Shatthadi ,Dinesh Gundurao ,Srivallaprasat ,Karke ,K.K. ,Anekiri , Gharke inquiry into Sathyamurthy Bhavan stomping issue, Delhi High Court, Dinesh Kundurao, Srivallaprasad
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...