ஆவடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகி நள்ளிரவில் அதிரடி கைது: 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை: ஆவடி அருகே திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் தாளாளர் சிந்தை ஜெயராமன். அவரது மகன் வினோத் பள்ளி நிர்வாகியாக உள்ளார். இப்பள்ளி மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடந்த 23ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு, நிர்வாகி வினோத்தை கைது செய்யும்படி சாலைமறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், திருநின்றவூர் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவான பள்ளி நிர்வாகி வினோத்தை 4 தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 23ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேர் மற்றும் கணினி ஆசிரியரிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பாளர் கங்கைராஜ் விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட 3 மாணவிகள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெ.பவித்ரா முன்பு தங்களின் பெற்றோருடன் ஆஜராகி தனித்தனியே வாக்குமூலம் அளித்தனர். இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  பள்ளி நிர்வாகி வினோத் நேற்றுமுன்தினம் பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், எங்களது பள்ளியில் நீண்ட காலமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. எங்களின் பள்ளி மாணவ-மாணவிகள் மிக நல்லவர்கள். யாருடைய பேச்சையோ கேட்டு, என்மீது பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் என பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கும்போது, நான் உயிருடன் இருப்பேனா எனத் தெரியாது. என்மீது பொறாமை காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதிலிருந்து விடுபட முடியாமல் நான் தவித்து வருகிறேன் என வினோத் பேசியுள்ளார்.

இதற்கிடையில், தலைமறைவான வினோத் மற்றும் அவரது மனைவி கோவாவில் இருந்து சென்னைக்கு வருவதாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னை விமானநிலையத்துக்கு ஆய்வாளர் லதா போலீசாருடன் விரைந்து சென்றார்.

விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த வினோத்தை பிடித்தனர். ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அவரை கொண்டு வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் ேநற்று காலை வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சுமித்ராதேவி முன்பு ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில், 15 நாள் காவலில் வினோத்தை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: