சொத்து பிரச்னையில் வீட்டில் சிறை வைத்ததால் விரக்தி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டது போலீஸ்: தலைமறைவான மகனுக்கு வலை

சென்னை: மந்தைவெளி ராஜாகிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் கவுசல்யா (74). இவருக்கு ஜெயகுமார், கோவிந்தராஜ், பரமேஸ்வரி, கோபிநாத் ஆகிய 4 பிள்ளைகள். கணவர் காளியப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் இறப்புக்கு பிறகு கவுசல்யா தனது சொத்துகள் அனைத்தையும் மகள் உள்பட 4 பிள்ளைகளுக்கும் சமமாக பிரித்து கொடுத்துள்ளார். கவுசல்யாவின் மகள் பரமேஸ்வரிக்கு பெண் குழந்தைகள் என்பதால், மகள் பெயரில் உள்ள சொத்துகளை அவரது குழந்தைகள் பெயரில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இது இளைய மகன் கோபிநாத்திற்கு பிடிக்கவில்லை.

இதனால் தனது தாயிடம், தனது சகோதரி குழந்தைக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தை திரும்ப எழுதி கொடுக்க கோரி கோபிநாத் சகோதரி பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பரமேஸ்வரி தனது சகோதரன் கோபிநாத் மீது பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே தனது தாய் கவுசல்யாவிடம் மகள் பரமேஸ்வரி பெண் குழந்தைக்கு எழுதி வைத்த சொத்தை மீட்டு தரக்கோரி கோபிநாத் அடிக்கடி தகராறு  செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோபிநாத்  தனது தாய் கவுசல்யா மற்றும் சகோதரி பரமேஸ்வரியிடம் மீண்டும் சொத்துகளை எழுதி கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபிநாத் தனது தாய் மற்றும் சகோதரியை வீட்டின் அறையில் சிறை வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டின் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் கவுசல்யா மற்றும் அவரது மகள் பரமேஸ்வரி ஆகியோர் வீட்டின் பால்கனியில் இருந்து உதவி கேட்டு கதறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கவுசல்யா வெளியே வரமுடியாமல் வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனே பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார் ஏணி உதவியுடன் பால்கனி வழியாக உள்ளே சென்று மூதாட்டி மற்றும் அவரது மகளை பத்திரமாக மீட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து  அனைவரையும் வெளியே அழைத்து வந்தனர். பின்னர், சொத்து பிரச்னையால் தாய் மற்றும் சகோதரியை வீட்டில் சிறை வைத்த மகன் கோபிநாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: