இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

ஆக்லாந்து: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 47.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.  

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் தற்போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 124 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மான் கில் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த போட்டியிலாவது ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் வழக்கம் போல சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்களில் வெளியேறினார்(இவருக்கு டி20 தான் சூட் ஆகும் போல).

ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி 38 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அந்நியனாக மாறி அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார். 50 ஓவர் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது.

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் விக்கெட்டே விடமால் இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்த நியூசிலாந்து அணி வெற்றி பாதையில் பயணிக்க தொடங்கியது.

இறுதியில் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. டாம் லேதம் 104 பந்துகளில் 145 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி நவ.27ம் தேதி நடக்க உள்ளது.

Related Stories: