×

மந்தை எதிர்ப்பு சக்தியை அடைந்துவிட்டோமா?!

சமூக நோயெதிர்ப்பு சக்தி (Herd Immunity) ஒன்றே கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்கான சிறப்பானதும், இறுதியானதுமான நாம் கையில் எடுக்கக்கூடிய  வழியாக இருக்க முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வந்தனர். மூன்றாம் அலை அக்டோபரில் தொடங்கும் என்று செய்திகள் வரும் சூழலில், சமூக நோய் எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுவிட்டோமா
என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு நோய்க்கு சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு எவ்வளவு சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் குறிப்பதே சமூக நோயெதிர்ப்பு சக்தி (Herd Immunity) எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு விதமான தொற்று நோய்க்கும் வெவ்வேறு விதமான சதவீதம் மாறுபாடு இருக்கும்.

எடுத்துக்காட்டாக அம்மை, போலியோ போன்ற நோய்களுக்கு 90 சதவீத மக்களுக்காவது  நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் மக்களில், 95 ஆயிரம் பேருக்காவது நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்தான் இவர்களும், மீதியுள்ள 5 ஆயிரம் பேர்களுக்கும் அந்த தொற்று நோய் வராமல் இருக்கும். சாதாரணமாக பன்றிக்காய்ச்சல், நுரையீரல் தொற்றி னால் வரும் சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று நோய்களுக்கு 60 முதல் 70 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் போதுமானது.

இந்த  கொரோனா நோய்த் தொற்றுக்கும் 60 முதல் 70 சதவீதம் சமூக நோய்எதிர்ப்பு சக்தி போதும். நம் நாட்டைப் பொருத்தவரை, ஊரடங்கு அறிவித்ததன் மூலம் கொரோனா நோய்த்தொற்று சமுதாயப்பரவலை தற்காலிகமாக தடுத்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக தடுக்கவில்லை. இந்த சமூக நோய்எதிர்ப்பு சக்தியை இரண்டு வழிகளில் பெறலாம்.

1. இயற்கை நோய்எதிர்ப்பு சக்தி: சமுதாயத்தில் நோய்த்தொற்று பரவலாகும்போது, அதிகப்படியானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்போது, குறிப்பிட்ட இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான நோய்எதிர்ப்பு சக்தி இயற்கையாக அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதன்மூலம் மீதமுள்ளவர்களை அவர்கள் காப்பாற்றுகிறார்கள்.

2. அடுத்ததாக, தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை மக்களிடத்தில் உருவாக்குவது.அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முற்றிலும் நிறுத்தி, முழுவதுமாக அடைத்துவிட்டு, பொருளாதாரத்தை முடக்குவது என்பது நம்நாட்டைப் பொருத்தவரை சாத்தியமில்லாத செயல்.ஊரடங்கை பொறுத்துக் கொள்வது இப்போதைய கணக்காக இருந்தாலும், 70 சதவீத மக்களுக்கு நோய்த்தொற்று பரவல் நல்ல வழியாக இருக்க முடியும்.

அதிக சதவீத மக்கள் கொரோனாவிற்கு எதிரான நோய்எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டால், நோய்த்தொற்று பரவுவது குறைந்துவிடும். மீதமுள்ள 30 சதவீத மக்களை காப்பாற்றி விடலாம்.
மூன்றாம் அலைக்குத் தேவையான வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றின் இருப்பை அதிகரித்துக் கொள்வது, நோயாளிகள் தங்குவதற்கான மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது போன்ற மருத்துவ முன்னேற்பாடுகளை தயார்நிலையில் வைத்துக் கொள்வதற்கான இடைவெளிதான் (Breathing gap) இந்த ஊரடங்கு காலம்.

நமது அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளில் ஏற்கனவே ஆரம்பித்தாகிவிட்டது. அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியது 30 சதவீத மக்களில், முதியவர்கள்,  புற்றுநோயாளிகள், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு போன்று ஏற்கனவே நோய் பாதிப்புள்ளவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மூன்றாம் அலை தொடங்கினாலும் அவ்வப்போது இடைவெளிவிட்டு, ஊரடங்கை தளர்த்துவதும், கட்டுப்படுத்துவதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொற்றுநோயின் வீரியம், தாக்கம் ஒவ்வொருவரிடத்திலும் எப்படி வேறுபடுகிறது என்பதை அரசு தீர்மானிக்க முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு சிலருக்கு தொற்று நோய் வந்துபோனதற்கான எந்தவொரு அடையாளமுமே இல்லாமலே கூட இருந்திருக்கலாம். ஒவ்வொருவரின் நோய்எதிர்ப்பு சக்தியைப் பொருத்து நோயின் வீரியம்,  மாறுபடும். அதேபோல ஒவ்வொரு பகுதியிலும் நோயின் தீவிரத்தன்மை மாறுபடும். இதையெல்லாம், அந்தந்த பகுதியில் உள்ள மக்களிடத்தில் சீரற்ற (random) ரத்தமாதிரி  பரிசோதனைகளை செய்வதன் மூலம்  ஒரு முடிவுக்கு  வரமுடியும். இப்போதைக்கு மற்ற நாடுகளைப்போல மூன்றாம் அலையால் பெரிய தாக்கம் இருக்காது என்ற அறிஞர்களின் கணிப்பு நமக்கு கொடுத்துள்ள ஆறுதலான விஷயம்!

Tags :
× RELATED மெனோபாஸ் / பெரிமெனோபாஸ் ஆயுர்வேத கண்ணோட்டம்