காங்கிரசில் இருந்து ரூபி மனோகரன் சஸ்பெண்ட் காலையில் போட்ட உத்தரவு மாலையில் நிறுத்தம்: மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடி

சென்னை: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி காலையில் அறிவித்தார். ஆனால், மாலையில் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைத்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகையிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதில் திடீர் திருப்பமாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் சொந்த கட்சிக்காரர்களையே ஆட்களை வைத்து தாக்கியதாக புகார் செய்தனர். இதற்கிடையே, 63 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கை குழு ரூபி மனோகரன் எம்எல்ஏ மற்றும் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோருக்கு நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.

ரூபி மனோகரன், காலஅவகாசம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தொலைபேசியிலும் தகவல் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இந்நிலையில், நேற்று காலை தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அதன் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் கூடியது. இதில் குழு உறுப்பினர்கள் உ.பலராமன், கே.என்.பழனிச்சாமி, இதயத்துல்லா, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கடிதம் கொடுத்ததால் ரூபி மனோகரன் வரவில்லை. அதேநேரம், நோட்டீஸ் அனுப்பப்பட்ட எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். அதை நடவடிக்கை குழுவினர் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, கே.ஆர்.ராமசாமி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தியது.

ஆலோசனைக்கு பிறகு கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக இவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தகவல் அளித்தோம். அதில், ரூபி மனோகரன் தனக்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பதில் கூறியுள்ளார். அவர் கூறிய பதில் குழுவுக்கு ஏற்றதாக இல்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்படி, அவர் மீண்டும் குழு முன்பு ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். விளக்கம் தெரிவிக்கும் வரை ரூபி மனோகரனை நாங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கிறோம்.

அவர் சரியான பதிலை எங்களிடம் தெரிவித்த பின்பு அது சம்பந்தமான நடவடிக்கைகளை மீண்டும் இந்த குழு எடுக்கும். கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இருக்கிறது. அடுத்த கூட்டம் எப்போது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். அந்த கூட்டத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வரை ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், அதிரடி திருப்பமாக தமிழகத்துக்கான காங்கிரஸ் டெல்லி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ரூபி மனோகரன் மீது எடுத்த நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தமிழக காங்கிரசில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரனை, இடை நீக்கம் செய்திருக்கிறார் என்ற தகவல் எனது கவனத்துக்கு வந்தது. அவரை இடை நீக்கம் செய்ததில், ஒழுங்கு நடவடிக்கை குழு கடைபிடித்த நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இயற்கை நீதிக்கு எதிரானதாகவும் இருக்கிறது. எனவே, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ரூபி மனோகரன் எம்எல்ஏவை தற்காலிக இடைநீக்கம் செய்திருப்பதை நான் இதன் மூலம் முழுவதுமாக நிறுத்தி வைக்கிறேன் என்று கூறியுள்ளார். காலையில் விசாரணை நடந்த நிலையில், சிறிது நேரத்திலேயே ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், மாலையில் அவரது சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதும் காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பொருளாளருக்கே இந்த கதியா? ரூபி மனோகரன் பேட்டி

நெல்லை மாவட்டம், களக்காட்டிற்கு நேற்று வந்த ரூபி மனோகரன் எம்எல்ஏ அளித்த பேட்டி: என்னை கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கியிருப்பது கஷ்டமாக உள்ளது. எனது சொந்த தொழிலை கூட கட்சிக்காக விட்டுவிட்டு மக்கள் பணி மற்றும் கட்சி பணியை செய்து வருகிறேன். நாங்குநேரி தொகுதி மக்களுக்காக உழைத்து வரும் நிலையில் இடைநீக்கம் செய்துள்ளதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்சித் தலைவர்களை குறை சொல்ல விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆட்டை, மாட்டை அடிப்பது போல் எனது தொகுதி தொண்டர்களை அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியிலேயே தமிழகத்தில் நம்பர் ஒன்னாக 35 ஆயிரம் பேர் உறுப்பினராக நாங்குநேரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த அவமரியாதை இல்லை, நாங்குநேரி தொகுதி மக்களுக்கு செய்த அவமரியாதை ஆகும். நான் ஒரு எம்எல்ஏ, அத்துடன் கட்சியின் பொருளாளர். எனக்கே இந்த கதியா. நான் எந்த தவறும் செய்யவில்லை. இது இறுதியான முடிவு அல்ல. அகில இந்திய தலைமை எங்களுக்கு சரியான முடிவை சொல்லும் என்று நம்புகிறேன். என்னை நீக்கியதை தொண்டர்கள் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர்.

Related Stories: