×

தாமிரபரணி நதி நீரை பாதுகாக்க `பொருநை நதி பார்க்கணுமே...’ புதிய கல்விதிட்டம் தொடக்கம்: பள்ளி மாணவர்கள், தூதுவர்களாக நியமனம்

நெல்லை: `பொருநை நதி பார்க்கணுமே’ என்ற தலைப்பிலான கல்வித்திட்டம் தொடக்க விழா திருப்புடைமருதூர் தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது. இத்திட்டத்தில் தாமிரபரணியை தூய்மைப்படுத்த மாணவர்கள், சிறப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதியாக ஓடும் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தி அதனை நேரிடையாக அள்ளிப்பருகும் நீராக மாற்றுவதற்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஆர்வம் உள்ள அமைப்புகளை ஒன்றிணைத்து தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் பணி, நதிக்கரைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் , மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி `பொருநை நதி பார்க்கணுமே’ என்ற தலைப்பிலான கல்வித்திட்டம் தொடக்க விழா, திருப்புடைமருதூர் தாமிரபரணி நதிக்கரை பறவைகள் காப்பகம் பகுதியில் நடைபெற்றது. அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர் ரோகிணி நிலக்காணி, திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட வனஅலுவலர் முருகன், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகம்மதுஷபி ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புஷ்பலதா பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக `பொருநை நதி பார்க்கணுமே’  திட்ட களப்பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டது.

அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி சுபத்ராதேவி, முனைவர் சேஷாத்ரி, அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மைய கல்வியாளர் மரிய அந்தோணி, ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் , ஆராய்ச்சியாளர்கள் சரவணன், தளவாய்பாண்டி, தணிகைவேல், ராகுல், ஜெபின், வரலாற்று ஆய்வாளர் கோமதிசங்கர் ஆகியோர் தாமிரபரணி நீரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் இத்திட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் `பொருநை நதி’ பாதுகாப்பு தூதுவர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் தாமிரபரணிநதி ஓடும் பகுதி முழுவதும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

Tags : ``Borunai ,Parkanume ,Tamirabarani , ``Borunai Nadi Parkanume...'' new educational program launched to conserve Tamirabarani river water: School students appointed as ambassadors
× RELATED தாமிரபரணி நதி நீரை பாதுகாக்க `பொருநை...