×

தொடரும் தொடை எலும்பு முறிவுகள்... காரணங்களும் தீர்வுகளும்!

நன்றி குங்குமம் தோழி

‘எங்க தாத்தா பாத்ரூம்ல விழுந்து தொடை எலும்பு ஒடஞ்சிடிச்சு...’ ‘காலில வரைக்கும் நல்லாதான் இருந்தாங்க பாட்டி... எங்க விழுந்தாங்கன்னு தெரில, இடுப்புலாம் வலிக்குதுன்னு சொல்றாங்க...’இப்படி வயதானவர்கள் குறித்து இன்றைக்கு நாம் அதிகம் கேள்விப்படுவது இடுப்பு எலும்பு சம்பந்தமாகவே இருக்கும். காரணம், வயதாக ஆக எலும்பு முறிவு ஏற்படுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது. எனினும், தொடை எலும்பு முறிவு ஏற்படுவது இன்றைக்கு வளரும் நாடுகளில் அதிகரித்து வருகிறது எனலாம்.அப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொடை எலும்பு முறிவு பற்றி இங்கே நாம் விரிவாக தெரிந்துகொள்வோம்.

தொடை எலும்பின் அமைப்பு...

*தொடை எலும்பும் இடுப்பு எலும்பும் இணைந்து இடுப்பு மூட்டை (hip joint) உருவாக்கும்.

*ஒரு கிண்ணத்தில் அதனை விட ஒரு சுற்றளவு குறைந்த விட்டம் கொண்ட பந்தினை (ball) அதில் பொருத்தினால் அது எப்படி பொருந்திக் கொள்ளுமோ அவ்வாறுதான் இந்த இடுப்பு மூட்டின் அமைப்பும் இருக்கும்.

*இதில் பந்து போன்ற தலையை மேலே கொண்டும், கீழே நீளமான எலும்பாய் நீள்வதும்தான் தொடை எலும்பு.

*இவ்வாறான அமைப்பைக் கொண்ட தொடை எலும்பின் அந்த பந்து பகுதியிலும், அதன் கீழ் வரும் நீண்ட பகுதியிலும் ஏற்படுவதே இந்த தொடை எலும்பு முறிவு ஆகும்.

யாருக்கெல்லாம் வரலாம்...?

*பெரும்பாலும் இந்த வகை எலும்பு முறிவு வயதானவர்களுக்குத்தான் அதிகம் வரும். அதிலும் குறிப்பாக, எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் வரக்கூடும்.

*எலும்பு புரை நோயினால் எலும்புகள் வலுவிழந்து காணப்படும். இதன் காரணமாக யதேச்சையாகத் தடுமாறி குளியறையில் விழும்போது சிறிய விசைதான் (force) என நாம் நினைத்தாலும் அது முறிவை விளைவித்துவிடும்.

*அதிலும் ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிகம் ஏற்படக் கூடும்.

என்னென்ன அறிகுறிகள்...?

*இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் அதிக வலி உண்டாகும். மேலும் அங்கு வீக்கமும் சிவந்த தன்மையும் இருக்கும்.

*பாதிக்கப்பட்ட காலினை மடக்கி நீட்ட முடியாமல் போகும்.

*அடிபடாத காலினைக் கொண்டு தாங்கி தாங்கி நடப்பது.

எப்படி கண்டறிவது...?

*கீழே விழுந்ததும் அதிக அளவில் வலி இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவரை முதலில் பார்க்க வேண்டும்.

*அவர் பரிசோதனை செய்து, எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்வார்.

*பின் எலும்பு முறிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் பரிந்துரைப்பார்கள். இதனால் முறிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள மென் திசுக்களில் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

என்னதான் தீர்வு...?

*மற்ற எலும்பு முறிவைக் காட்டிலும் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

*எலும்பில் நான்கு இடங்களில் முறிவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை முறையினை மாற்றி அமைப்பார்கள்.

*எலும்பில் அதிக விரிசல் ஏற்பட்டு சிறுசிறு துகள் எலும்புகளாக இருப்பின் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வார்கள்.

*தேவைப்பட்டால் முறிந்த இயற்கையான எலும்புகளை அகற்றிவிட்டு செயற்கை மூட்டு வைப்பார்கள்.

பக்க விளைவுகள் வருமா...?

*எலும்பு முனைகள் கூடாமலே போவதற்கு அதிக  அளவில் சாத்தியக் கூறுகள் உள்ளன.

*இதுவரை முப்பது சதவிகிதம்பேர் ரத்தக் கட்டு ஏற்பட்டு அது ரத்த ஓட்டத்தில் சென்று இறந்திருக்கிறார்கள்.

*சிலருக்கு எலும்பு செல்கள் சரியான ரத்தப்போக்கு இல்லாமல் சேதம் அடைந்து இறந்து விடும். இதனை அப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து பக்கத்தில் உள்ள அனைத்து செல்களையும் அழித்து பெரும் ஆபத்தினை உண்டாக்கும்.

இயன்முறை மருத்துவத்தின் பங்கென்ன...?

*உடனடியாக எழுந்து நிற்கவும், முறிவு ஏற்பட்ட காலினை ஊன்றி உடல் எடையை சுமந்து நடக்கவும் கூடாது என்பதால் தகுந்த நேரம் வரும்வரை காத்திருந்து இயன்முறை மருத்துவர் போதிய பயிற்சிகளை கற்றுக்கொடுப்பர்.

*முதலில் crutches என்று சொல்லப்படும் ஊன்றுகோல் கொண்டு நடக்கவும், பின் தனியாக நடக்கவும் பயிற்சிகள் வழங்குவர்.

*இடுப்பு எலும்பின் அருகில் உள்ள தசைகளுக்கு வலிமை சேர்க்கும் உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றாக சொல்லித் தருவர்.

*மேலும் வீட்டில் எப்படி தன் தினசரி நடவடிக்கைகளை பாதித்த காலினைக் கொண்டு பக்குவமாக செய்யவேண்டும் என்பது போன்ற அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவர்.

நிகழாமல் தடுக்க...

*பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் தரைப் பகுதியை வழவழப்பாக இல்லாமல் சொரசொரப்பாக மாற்றிக்கொள்வது. அதிலும் குறிப்பாக, குளியலறை மற்றும் கழிவறையின் தரைகள்.

*குளியலறை, கழிப்பறை போன்ற இடங்களில் ஆங்காங்கே கைப்பிடிகள் அமைப்பது.

*எலும்பிற்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகளை உண்பதன் மூலமாக.

*தினசரி மிதமான உடற்பயிற்சிகள் செய்வதன் வழியாக.எனவே ‘அய்யோ இடுப்பு எலும்பு முறிஞ்சிப் போச்சி’ என பயம் கொள்ளாமல் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொண்டு, இயன்முறை மருத்துவரின் துணையோடு தேவையான பயிற்சிகளை தவறாமல் பின்பற்றி வந்தாலே போதும் ஆரோக்கியமாக வாழலாம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags :
× RELATED கல்லீரலை குறி பார்க்கும் ஹெபடைடிஸ்!