குழந்தை வளர்ப்புக்குத் தேவை பணமில்லை நேரம்தான்!

நன்றி குங்குமம் தோழி

துர்கேஷ் நந்தினி

கோயம்புத்தூரில் வசித்து வரும் துர்கேஷ் நந்தினி, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஹோம்-ஸ்கூலிங் செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றினால் பள்ளி, கல்லூரிகள் மூடியதால், மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர். அதே நேரம் பெற்றோர்கள் பலர் ஹோம்-ஸ்கூலிங் எனும் கல்விமுறை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். சிலர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், ஹோம்-ஸ்கூலிங் என்றால் குழந்தைகளுக்கு வீட்டிலேயே பாடப்புத்தகங்களை பார்த்துச் சொல்லிக் கொடுப்பது என நினைக்கிறார்கள். ஹோம்-ஸ்கூலிங் என்பது புத்தகங்களை தாண்டிய ஒரு வாழ்க்கைமுறையாகும். இது குறித்து துர்கேஷ் நந்தினி முழுமையான விவரங்களை நம்முடன் பகிர்கிறார்.

“என் முதல் குழந்தைக்கு ஆறு வயது வரை எழுதப் படிக்கத் தெரியாது, என்நேரமும் விளையாடிக்கொண்டுதான் இருப்பாள். விளையாட்டு என்றால் செல்போனில் இல்லை, மற்ற குழந்தைகளுடன் தண்ணீரிலும் சேற்றிலும், பறவைகள், பூச்சிகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் தான் விளையாடுவாள். குழந்தைகளை கொஞ்ச காலம் குழந்தைகளாகவே இருக்கவிடுங்கள். அவர்களை ஏன் பெரியவர்களாக்க முயல்கிறீர்கள். வாழ்க்கை முழுக்க அவர்கள் பெரியவர்களாகத்தானே இருக்கப் போகிறார்கள்.

அதை நோக்கி ஏன் இப்போதே ஓட வேண்டும். குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கட்டுமே. அதனால், குழந்தை பருவத்தில் எழுதப் படிக்க கற்றுக்கொள்வதை என்னால் முடிந்த வரை தள்ளிப் போட விரும்பினேன். குழந்தைகளை பாடப்புத்தகங்களுக்குள் புதையவிடாமல் அவர்களின் சிந்தனைகளை ஆழமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

விளையாட்டைத்தாண்டி அவள் எங்களுடன் நிறையப் பேசுவாள். குழந்தை வளர்ப்பில் நாம் நம் குழந்தையிடம் எப்படி பேசுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமான பகுதியாகும். சொல்லப்போனால் எப்படிப் பேசுகிறோம் என்பதைத் தாண்டி, குழந்தை பேசுவதை எவ்வளவு பொறுமையுடன் கேட்கிறோம், புரிந்துகொள்கிறோம் என்பது அதைவிட முக்கியமாகிறது. நான் என் குழந்தைகளை ஹோம்-ஸ்கூலிங் செய்ய வேண்டும் என ஒரே நாளில் முடிவெடுக்கவில்லை. அதன் பயன்களைப் பற்றி அறிந்திருந்தாலும், என்னால் என் குழந்தைக்கு பள்ளிக்கு நிகரான அல்லது அதையும் தாண்டி கல்வியை முழுமையாகக் கொடுக்க முடியுமா எனப் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து, நிபுணர்களைச் சந்தித்து பின்னரே முடிவு செய்தேன்.

இந்திய அளவில் பல மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் கலந்துகொள்ளும் ஹோம்-ஸ்கூலிங் சார்ந்த ஒரு வர்க்-ஷாப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு வந்திருந்த பெற்றோர்கள் எல்லோருமே ஐ.ஐ.டியில் படித்த விஞ்ஞானிகளாகவும், நாட்டின் தலைசிறந்த திறமைசாலிகளாகவும் இருந்தார்கள். இவர்கள் எல்லாருமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே படிக்க வைக்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும் எனப் புரிந்தது. அந்த பெற்றோர்கள் தலைசிறந்த கல்லூரியில் பயின்றவர்கள். அவர்களைப் போல என்னால் என் குழந்தைக்குப் பாடம் நடத்த முடியுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. அவர்கள், தெரியாது என நினைப்பதே முதல் வெற்றி என்றார்கள். தெரியாததை உன் குழந்தையுடன் சேர்ந்து நீ கற்றுக்கொள்ளலாம் என்றனர். வெறும் காகிதத்திலும் வார்த்தைகளிலும் கல்வியை கற்காமல் நேரடியாக செயல்முறைகளை கற்று புரிந்துகொள்ளலாம் என்றனர்.

அப்போதுதான் ஹோம்-ஸ்கூலிங் என்பது ஒரு கல்விமுறைஅல்ல, அது வாழ்க்கைமுறை எனப் புரிந்தது. ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பள்ளியில் படிக்கும் அனைத்து விஷயமும் இயற்கையை, மற்ற உயிரினங்களை, மனிதர்களை, இந்த உலகத்தை புரிந்துகொள்வதுதான். எனவே நான் என் குழந்தையுடன் நான்கு வருடங்கள் பயணம் செய்தேன். அவளால் எழுதப் படிக்க மட்டுமே தெரியாது. ஆனால் அனுபவப்பூர்வமாகப் பல தகவல்களை அவள் தெரிந்துகொண்டே இருந்தாள். அவளது சிந்தனைகள் விரிவடைந்து எண்ணங்கள் ஆழமாகின.

இந்த சமயத்தில்தான் மினிமலிசம் வாழ்க்கை பற்றிய அறிமுகமும் கிடைத்தது. பொதுவாக ஹோம்-ஸ்கூலிங் செய்யும் பெற்றோர்கள் அனைவரும் இயற்கையைச் சார்ந்த சாதாரண வாழ்க்கையில் அசாதாரண அனுபவங்களைச் சந்திப்பவர்களாக இருந்தனர். அவர்கள் அவசரமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தனர். எனக்கு அந்த வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடத் தடையாக இருந்தது பொருட்களின் மீதான நாட்டம்தான். என்னுடைய நேரமும் கவனமும் பொருட்கள் மீதும் அதைப் பாதுகாப்பதன் மீதுமே இருந்தது. எனவே மினிமலிசம் வாழ்க்கையை பின்தொடர ஆரம்பித்தேன். இதனால் வீட்டிலும் மனதிலும் நிறைய இடம் கிடைத்தது. பொருட்களின் மீதான நாட்டம் இப்போது மனிதர்கள் மீது திரும்பியது.

குழந்தை வளர்ப்பில், குழந்தைகளுடன் மட்டும் அன்பாக பேசினால் போதாது, வீட்டிலும் நமது மற்ற உறவுகளிலும் அதே அன்பை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு தினமும் எழுதுவது எனக்கு உதவியாக இருந்தது. என் உணர்ச்சிகளை, சிக்கல்களை ஒரு புத்தகத்தில் எழுதி என் எண்ணங்களையும் வார்த்தைகளையும் செதுக்க ஆரம்பித்தேன். பல தொலைந்துபோன உறவுகளைத் தேடி மீண்டும் அந்த உறவுகளை புதுப்பித்தேன், அன்பாகவும் பொறுமையாகவும் அனைவரிடமும் பேச ஆரம்பித்தேன். அதை அப்படியே என் குழந்தைகளும் பின்பற்ற

ஆரம்பித்தனர்.

இரண்டாவது முறை கர்ப்பம் தரித்த போது, இயற்கை முறையில் பர்த்திங் விலேஜ் எனும் இடத்தில், குறைந்தபட்ச மருத்துவ இடையீட்டுடன் என் குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்தேன். அதே நேரத்தில் ஆரோக்கியமான இயற்கை முறை உணவு குறித்த முக்கியத்துவமும் புரிந்தது. அதனால் தினமும் இரண்டு வேளை பச்சை காய்கறி - பழங்கள் மட்டுமே உண்டு ஒரு வேளை மட்டும் சமைத்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தோம்.

அந்த பழக்கம் அப்படியே எங்களை இயற்கை விவசாயம் நோக்கி அழைத்துச் சென்றது. நானும் என் குழந்தைகளும் உணவை எப்படி விளைவிப்பது என நேரடியாக விவசாயிகளிடம் கற்று, நாங்களே உணவை உற்பத்தி செய்து தினமும் ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிடப் பழகிவிட்டோம். அவசரமற்ற வாழ்க்கையில்தான் இதெல்லாம் சாத்தியமாகும். எங்கள் அமைப்பில், இரு பெற்றோர்களில் ஒருவர் நிச்சயம் தன் நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிடுவதற்காக தன் வேலையை விட்டிருப்பார். அல்லது வீட்டிலிருந்தே கொஞ்ச நேரம் வேலை செய்யும் பணியில் இருப்பார்.

குப்பைகளை ஏன் மறுபயன்பாடு செய்ய வேண்டும்? என் மகள் கேட்ட கேள்விக்கான பதிலை நோக்கி நகர்ந்த போதுதான் இந்த மினிமலிசம், இயற்கை முறை உணவு போன்ற பல கருத்துகளுக்கான அறிமுகம் கிடைத்தது. குழந்தைப்பருவம் மிகவும் அழகானது. குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எல்லாமே மிகவும் தூய்மையாக மனதார கேட்கப்படும் கேள்விகள். குழந்தைகள் அந்த கேள்விகளைக் கேட்க நாம் அனுமதிக்க வேண்டும். அவர்கள் கேள்வி கேட்பதற்குள் தகவல்களைக் கூறி இதை இந்த கண்ணோட்டத்தில் மட்டும்தான் பார்க்க வேண்டும் என அவர்களது கற்பனைத் திறனை நாம் கட்டுப்படுத்திவிடக் கூடாது.

அவர்களாகவே  முயற்சி செய்து பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும். அந்த கேள்விகள் அவர்களது வாழ்க்கையை மட்டுமில்லாமல் நம் வாழ்க்கையைக் கூட மாற்றிவிடலாம்.புத்தகங்கள் கற்றுக்கொடுப்பதை விட, மனிதர்களும் அவர்களைத் தேடி செல்லும் பயணங்களும் எனக்குப் பல உண்மைகளை, அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. தொடர்ந்து நான்கு வருடம், நானும் என் குழந்தையும் தினமும் ஒரு புது மனிதரைச் சந்திக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணித்தோம்” என்கிறார். இன்று பல இளைஞர்கள் குழந்தைகள் பிறந்தால் பயணிக்க முடியாதே என நினைக்கிறார்கள். ஆனால் துர்கேஷ் நந்தினி தனது இரண்டு குழந்தைகளுடன் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணிக்கிறார். குழந்தைகளுடன் பயணம் செய்தும் அவர்களை சுயசார்பான வாழ்க்கைக்குப் பழக்குகிறார்.  

‘‘குழந்தைகளுடன் நான் பல கிராமங்களுக்கு பயணித்தபோது, அவர்களுக்கு நகர வாழ்க்கையைவிட அவசரமில்லாமல் வாழும் கிராம வாழ்க்கையே பிடித்திருந்தது. சில மாதங்களில் நண்பர்களுடன் பயணித்தால் நன்றாக இருக்குமே என நாங்கள் நினைத்தோம். குழுவாகக் கல்வி சார்ந்த பயணங்களை மேற்கொண்டோம். டைனோசர் பற்றி தெரிந்துகொள்ள குஜராத்தின் டைனோசர் புதை படிவ பூங்காவிற்கு சென்றோம். ஆசிரமங்களில் தங்கி அங்கு வாழும் மக்களின் கலாசாரத்தைக் கற்றுக்கொண்டோம். கடற்படை பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்பியதால், விசாகப்பட்டினம் சென்று கடலில் போர்கள் எப்படி நடக்கும் என தெரிந்துகொண்டோம்.

ஐந்து புலன்களும் செயல்படுத்தப்படும் போதுதான் கற்றல் ஆழமாக இருக்கும். புத்தகத்தில் படிக்கும் போது, விவரங்களைக் கேட்கும் போதும் கண்ணாலும் காதாலும் மட்டும்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் புலியை உயிரியல் பூங்காவில் காத்திருந்து பார்க்கும் அந்த தருணம் மற்ற புலன்களைச் செயல்படுத்தி உணர முடியும்” என்றார்.

நண்பர்களும் உறவினர்களும் இந்த வாழ்க்கை முறையை விமர்சிக்கவில்லையா என்றதற்கு, “விமர்சனங்களும் கேள்விகளும்தான் நம்முடைய பெரிய பலம். நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகளை அவர்கள் நமக்காக யோசித்துக் கேட்கும் போது அதை அன்பின் வெளிப்பாடாக அணுகி பதிலளிக்கலாம். பதில் இல்லை என்றால், தேடும் முயற்சியில் இறங்கலாம். என் மீது ஒவ்வொரு முறை விமர்சனங்களும் கேள்விகளும் வீசப்பட்ட போது, அதற்கான பதில்களைத் தேடிச் செல்வது சுவாரஸ்யமாகியது. சிலர் நான் கூறும் பதில்களைக் கேட்டு சமாதானமாகி, தாங்களும் இந்த பாதையில் இணைகிறார்கள்’’ என்றார்.

துர்கேஷின் குழந்தைகள் இருவரும் அவர்கள் வயதுக்கே உரிய குறும்புத்தனம் நிறைந்திருந்தாலும், அவர்களிடம் பொறுமையும் அமைதியும் அன்பும் நிறைந்திருக்கிறது. இது பற்றி கேட்ட போது, “குழந்தைகளின் பழக்கங்கள் எல்லாமே பெரியவர்களைப் பார்த்து வருவதுதான். குழந்தைகள் ஒரு விஷயத்திற்கு அடம்பிடிக்கிறார்கள் என்றால், அந்த நேரம் பெற்றோர்களும் சேர்ந்து அதற்காக அடம்பிடிக்கிறார்கள். இரு தரப்பும் பொறுமையை இழந்து அந்த இடத்தில் தங்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் எனப் பிடிவாதமாய் இருக்கிறார்கள். எங்களின் அவசரமற்ற வாழ்க்கையில் நிறைய நேரம் இருப்பதால், பதட்டமில்லாமல் வாழ்கிறோம். குழந்தைகள் வளர்ப்பு குழந்தைகளை விட பெற்றோர்களுக்கு ரொம்ப முக்கியம். குழந்தைகளை வளர்க்க பணம் தேவையில்லை, நேரம்தான் அவசியம்.

நான் இதுவரை குழந்தைகளை காலையில் எழுப்பியதே இல்லை. அவர்களாகவே தூக்கம் கலைந்து வரும் வரை வீட்டில் நாங்கள் யாருமே அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். முதலிலிருந்தே ஆரோக்கியமாக நேரத்தை செலவிடப் பழக்கப்படுத்தியிருந்ததால், அவர்களே தங்களுக்குத் தூக்கம் வரும் போது தூங்கிவிட்டு, காலை 7-7.30க்குள் முழித்துவிடுவார்கள். ஆனால் இந்த வாழ்க்கை முறை பெற்றோர்கள் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் சரிப்பட்டு வராது. எங்களுக்கு அடிப்படைத் தேவைகளே போதும் என நினைப்பதால், ஒருவர் வேலைக்குச் சென்றாலே எங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிடும். அப்படி இல்லாத குடும்பங்களில் ஹோம்-ஸ்கூலிங் பின்பற்றுவது கடினம்தான்.

பள்ளிக்குச் சென்றால் அதிக நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால், என் குழந்தைகளுக்கு இதே போல ஹோம்-ஸ்கூலிங் செல்லும் குழந்தைகளுடன் பயணம் செய்து ஆழமான நட்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நட்பில் யார் முதல் ரேங்க் வாங்குகிறார்கள் என்ற போட்டி கிடையாது. ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் அனுபவங்களையும் சமமாகப் பகிர்ந்து நட்பாக இருக்கிறார்கள். மனிதர்களைத் தாண்டி விலங்குகள் பறவைகளிடமும் அன்பாக இருக்கிறார்கள். இப்போது இந்த ஓபன் ஸ்கூலிங் கான்செப்டை பல பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் ஆதரித்து அங்கீகரிக்கின்றனர். அதன்படி நுழைவுத் தேர்வு மூலம் பல பள்ளிகளில் சேரமுடியும். தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக 8,10,11 & 12வது தேர்வுகளை எழுதி, எந்த பள்ளியிலும் சேரமுடியும். அதற்கான சான்றிதழ்களையும் பெறமுடியும்.

என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என எந்த திட்டமும் இல்லை. அவர்கள் எதுவாக நினைக்க விரும்புகிறார்கள் அதற்கு ஆதரவாக  இருப்பது மட்டும்தான் எங்களின் ஒரே குறிக்கோள். எதிர்காலத்தில் அவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என விரும்பினால் அதையும் நிச்சயமாக செய்வோம். நான் பள்ளி பாடங்களை குறையாகவோ தப்பாகவோ நினைக்கவில்லை. ஆனால் ஹோம்-ஸ்கூலிங் மூலம் போட்டிகள் பொறாமைகள் இல்லாத ஒரு முழுமையான கல்வியை என்னால் கொடுக்க முடிகிறது. என் குழந்தைகளும் தினமும் ஏதாவது ஒரு வகுப்பிற்குச் செல்வார்கள். அவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், பரதநாட்டியக் கலை என அனைத்துமே கற்றுக்கொடுக்கப்படும். இந்த பாடங்களை எந்த அவசரமும் இல்லாமல் தினமும் குறிப்பிட்ட நேரம் மட்டும் கற்றுக்கொள்கிறார்கள்” என்றார் துர்கேஷ் நந்தினி.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: