அம்மாவின் கனவை தன் கனவாக மாற்றிக்கொண்ட தொழில்முனைவர்!

நன்றி குங்குமம் தோழி

‘‘பொதுவாக அனைவருக்குமே ஒரு கனவு இருக்கும். பலர் அந்த கனவை நோக்கி தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அதற்காக உழைப்பார்கள். சிலருக்கு அந்த கனவு ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்துவிடும். என் அம்மாவிற்கும் ஒரு கனவு இருந்தது. அழகான ஆடைகளை உருவாக்க வேண்டும் என்று. பல காரணங்களால் அந்த கனவு முழுமையாக நிறைவேறவில்லை என்றாலும், தன்னால் முடிந்த வரை குறைந்தபட்ச துணிகளைத் தைத்துக்கொடுத்து வந்தார்.

பலரும் 25-30 வயதிற்குள் தங்களின் கனவு நிறைவேறாத போது, வேறொரு கனவை அல்லது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் என் அம்மா ஐம்பது வயதில் தனது கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தார். அவரது மன வலிமையும் ஆர்வமும் என்னை வியக்க வைத்தது. அவரது மனதைரியம்தான் என்னையும் முன்னுக்கு தள்ளியது” என்கிறார், தனது அம்மா சாந்தியின் கனவை தன்னுடைய கனவாக ஏற்றிருக்கும் கவுதம்.

தொடர்ந்து, “கார் வடிவமைப்பாளராக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. இங்குக் கல்லூரியில் படித்து வந்தபோது என் மீதி படிப்பை வெளிநாட்டில் தொடரும் வாய்ப்பு கிடைத்து. உடனே அமெரிக்காவில் என் படிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் ஒரு நாள் என் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவசர அவசரமாக இந்தியா வரவேண்டி இருந்தது. அப்போது தான் என் பெற்றோருக்கு வயதாகிக்கொண்டே போகிறது என்பது புரிந்தது. நான் யாருக்காக உழைக்கிறேனோ, எந்த குடும்பத்தின் சூழ்நிலை முன்னேற வேண்டும் என நினைக்கிறேனோ அந்த குடும்பத்தினரை வருடத்திற்கு ஒரு முறை பார்ப்பதே கடினமாகிவிட்டதை உணர்ந்தேன்.

அப்போதுதான் என் அம்மாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அமெரிக்காவிலிருந்து மொத்தமாக கிளம்பி இந்தியா வந்தேன். வழியில் 30-மணி நேரம் பயணம். அந்த சமயத்தில் பல ஆய்வுகளைச் செய்தேன். அதில் ஒரு சின்னத் தகவல் கிடைத்தது. தமிழர்களின் பெருமைக்குரிய பட்டு, இன்றும் பெண்களின் மிகவும் பிடித்த உடையாக இருந்தாலும், குழந்தைகள் பட்டுப்பாவாடை அணிவதை நிறுத்திவிட்டார்கள் எனத் தெரிந்தது.

காரணம், தையல் தொழிலாளிகளுக்கு போதுமான வருமானத்தைக் கொடுக்காததுதான் எனப் பின்னர் தெரியவந்தது. இதனால் மிகவும் கைதேர்ந்த தையல் கலைஞர்கள் பலர், துணிக் கடைகளில் சேல்ஸ் மேனாக வேலை செய்து வருகின்றனர். என் தாத்தாவும் அவர்களுடைய குடும்பத்தினரும் பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள். அவர்கள் மூலம் பட்டு நெய்பவர்களைச் சந்தித்து பேசிய போது, இன்று பட்டுச் சேலைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், பட்டுப் பாவாடைகளை யாரும் வாங்குவதில்லை எனத் தெரிவித்தனர். இதனால், பட்டு பாவாடைக்கான கைத்தறியே அழிந்து வருகிறது என வருத்தப்பட்டனர்.

பொதுவாகக் குழந்தைகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பாலிஸ்டர் போன்ற துணிகளால் ஆன உடைகளையே கவுன்களாக அணிகிறார்கள். இந்த துணி, குழந்தைகளுக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கும். அவர்கள் நாள் முழுக்க அழுது கொண்டே இருப்பார்கள்.  பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் இளவரசி போன்ற உடையை அணிய வேண்டும் என விரும்புகிறார்கள். அப்போது அதற்கேற்ற துணியில் உருவாக்கப்பட்ட உடையை அணிவதுதானே சிறந்தது. அடுத்து பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் அம்மாவுடன் பேசி குழந்தைகளுக்கான பட்டுப்பாவாடைகள் தயாரிக்கும் ஹாஃப் ஸ்கேல் - ‘Half Scale’ நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

2018ல் ஆரம்பிக்கப்பட்ட ஹாஃப்-ஸ்கேல், பட்டையும் தயாரித்து அதில் ரெடிமேட் ஆடைகளையும் உருவாக்கும் முதல் பட்டாடை நிலையமாகும். ஒவ்வொரு உடையையும் நாங்களே நெய்த பட்டு துணியில் உருவாக்கி வருகிறோம். இந்த ஆடைகள் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்த துணியால் உருவாக்கப்படுகிறது. நானும் என் குழுவினரும் ஒவ்வொரு ஆடையையும் பிரத்யேகமாக வடிவமைக்கிறோம். பிறந்த குழந்தைகளில் தொடங்கி 2-3 வயதுக் குழந்தைகளுக்கான பட்டுப் பாவாடை சட்டைகள், பட்டு கவுன்கள், பட்டு லெஹங்காக்கள் எங்களிடம் உள்ளது.

பாரம்பரிய பட்டில், ட்ரெண்டிங் ஆடைகளை குழந்தைகளுக்கு சவுகரியமான விதத்தில் உருவாக்குவதுதான் எங்களின் சிறப்பு. இன்று பல பிரபலங்கள், நட்சத்திர நடிகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எங்களிடம்தான் பட்டாடைகள் வாங்குகின்றனர். நாங்கள் விற்கும் ஒவ்வொரு துணியின் ஒரு பகுதி பணம் எங்கள் நெய்தல் கலைஞர்களுக்கு கொடுக்கிறோம். இன்று கலைஞர்கள் அழியாமல் இருக்க, அவர்களுக்குப் பணம் கொடுத்தால் போதாது. அவர்களுடைய கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய கலையை வாழ்வாதாரமாக மாற்றி அங்கீகரிக்க வேண்டும்.  

எங்களிடம் ஆன்லைனிலும் ஆடைகளை வாங்கலாம். அல்லது சென்னையிலிருக்கும் எங்களது ஆடை நிலையத்திற்கும் நேரடியாக வந்து குழந்தைகளுக்கான ஆடையை வாங்கலாம். நாங்கள் சிக்னேசர் ஆடைகளையும் தயாரிக்கிறோம். அதாவது வாடிக்கையாளருடன் கலந்து பேசி அவர்களின் சிந்தனையிலிருந்து, அவர்கள் விரும்பும் தீம்களில் டிசைன்களில் ஆடையை வடிவமைப்போம்.

அந்த ஆடையை இன்னொரு முறை வேறு யாராலும் வாங்க முடியாது. சின்னத்திரை நடிகர்களான  சஞ்சீவ்-மானசா குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு, சிக்னேசர் ஆடையை வடிவமைத்தோம். இப்போது கொண்டாட்டத்திற்கு ஒன்பது நாட்களின் சிறப்பையும் பெருமையையும் கூறும் ஒன்பது ஆடைகளை வடிவமைத்திருந்தோம். அடுத்ததாக தீபாவளி பண்டிகைக்கும் காஞ்சிபுரத்தின் பெருமைகளை பிரதிபலிக்கும் ஆடைகளை உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக பட்டாடைகளை ஹாஃப்-ஸ்கேல் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் கவுதம், வீவர்ஸ் நாட் (Weaver’s Knot) நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் காட்டன் உடைகளை தயாரித்து வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: