மேக்கப் பாக்ஸ் - ஐஷேடோ வெரைட்டிகள்

நன்றி குங்குமம் தோழி

ஐஷேடோ…

மேக்கப்பில் முக்கிய அம்சம் கண்களுக்கான மேக்கப்தான். கண்களை அழகாக எடுத்துக்காட்ட கண்களுக்கு மை தீட்டுவது, ஐலைனர் போடுவது, புருவங்களை அழகாக தீட்டுவது என்று பல அழகு குறிப்புகளை நாம் பின்பற்றினாலும், கண்களை மேலும் அழகாக எடுத்துக்காட்டுவது குறிப்பாக முகத்தில் எந்த மேக்கப்பும் போடாமல் கண்களுக்கு நல்ல பிரைட்டாக எடுத்துக்காட்டுவது என்றால் அது ஐஷேடோக்கள் தான்.

பல வண்ணங்களில் வரும் இந்த ஐஷேடோக்கள் கொண்டு கண் இமைகளை அழகுபடுத்தினாலே போதும், மேக்கப் லுக் சுலபமாகக் கிடைத்துவிடும். தினம் தினம் நடைமுறையில் அதிகம் புழக்கத்தில் இல்லாத ஐஷேடோக்களை கேஷுவலாக அலுவலகம் செல்லும் போதும், பார்ட்டிகளுக்கு போகும் போது மற்றும் ஐஷேடோ போட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாத வண்ணம் எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கமாக சொல்கிறார் மேக்கப் கலைஞர் ஜெயந்தி தீகாராம்.

மேக்கப்பே வேண்டாம் என்கிறவர்கள் கூட ஐஷேடோக்களைக் கொண்டு சுலபமாக மேக்கப் லுக் கொடுக்க முடியும். 80, 90களின் காலங்கள்லதான் ஐஷேடோக்கள் வர ஆரம்பிச்சது. காரணம் சினிமாக்கள்ல கலர் வந்தக் காரணம். அதற்கு முன்பு வரைக்கும் ஐஷேடோக்கள் இவ்வளவு கிடையாது. பழைய படங்களில் கூட கண்களில் பிரைட் ஐலைனர்கள், காஜல், மை போன்றவை மட்டுமே பயன்படுத்துவாங்க.

ஐஷேடோ வெரைட்டிகள்

ஐஷேடோக்களைப் பொறுத்தவரை மேட் ஐஷேடோ, ஷிம்மரி, கிரீம், கிளிட்டர் இந்த நான்கு வகைகள்தான். ஐஷேடோ தன்மையைப் பொறுத்து பவுடர், க்ரீம், அழுத்தப்பட்ட பவுடர்தான் வகைகள். பெரும்பாலும் ஆயில் லுக் சருமம் கொண்டவர்கள் கிரீம் ஐஷேடோக்களைத் தவிர்க்கணும். கிரீம் ஆயில் சருமத்தில் மேற்கொண்டு ஆயில் தன்மையை அதிகப்படுத்திடும். அதேபோல கிரீம் ஐஷேடோக்கள் சாதாரண சருமம் அல்லது வறண்ட சருமம் இருக்கறவங்க பயன்படுத்தினால் நல்ல க்ளோ சருமம் கிடைக்கும்.

பொதுவாகவே எத்தனை வகைகள் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும் ரெண்டு விதமாக மட்டுமே பிரிப்போம். ஒண்ணு மேட், இன்னொன்னு கிளிட்டர். மேட் ஐஷேடோக்களை கண்களுக்கும் புருவத்துக்கும் இடைப்பட்ட குழியில பயன்படுத்தி ஹைலைட் செய்துட்டு கிளிட்டர் ஷேடோக்களை கண் இமை மேலே பளபளன்னு தெரியும்படி போட்டுக்கணும். மேட் ஐஷேடோக்களை ஐலைனர், காஜல் பயன்பாட்டிற்கு முன்பு பயன்படுத்திக்கலாம். கண்கள் பிரைட்டா தெரியும். ஷிம்மர் அல்லது கிளிட்டர் ஐஷேடோக்களை பார்ட்டி, விழாக்கள், திருமணம் இப்படியான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினால் கிராண்ட் லுக் கொடுக்கும்.

இதில் சிலர் எனக்கு மேக்கப் போட்ட லுக்கே வேண்டாம்ன்னு சொல்வாங்க. அவர்களுக்கு ஸ்கின் கலரிலேயே ஐஷேடோ கொடுக்கறது வழக்கம். இவைகள் மட்டுமில்லாம ஸ்மோக்கி ஐஷேடோ லுக் கொடுக்க தனி ஷேடோ பேலட்டுகளே இருக்கு. மூணு கலர்கள் அடங்கின பேலட்டுகளா கருப்பு, பிரவுன், அடர் பிரவுன் இருக்கும். இதை பூனைக்கண் அப்படின்னு கூட சொல்லுவோம். அதாவது கண்களை சுற்றிலும் கருமை நிற புகைமூட்டம் அடித்தார் போல மேக்கப் கொடுக்கறது. ஸ்மோக்கி ஐ மேக்கப்களுக்கு லிப்ஸ்டிக் கலர்களில் லைட் கலர் மட்டுமே பயன்படுத்தணும். ரொம்ப சின்ன கண்கள் இருக்கிறவங்க ஸ்மோக்கி ஐஷேடோ மேக்கப்பை தவிர்ப்பது நல்லது. ஹாலோவீன், ஹாரர் தீம் இப்படி இருந்தா லிப்ஸ்டிக் பிரைட் கலர் போகலாம்’’ என்னும் ஜெயந்தி மேற்கொண்டு ஷேடோக்களின் விலை விபரங்களை அடுக்கினார்.

விலை ஓரளவிற்கு நல்ல பிராண்ட் எனத் தேர்வு செய்தால் ரூபாய் 350 முதல் டாப் பிராண்டுகளான மேக், ரெவ்லான் உள்ளிட்டவை ரூபாய் 5,000 முதல் 10,000 வரை கூட போகும். அதேபோல் ஷேடோக்களின் கலர் பேலட்களும் தேவைக்கேத்த மாதிரி தேர்வு செய்து வாங்கிக்கலாம். ஒரே ஒரு கலர் ஷேடோ துவங்கி முதல் இருபத்துக்கும் மேலான கலர்கள் அடங்கின ஷேடோ பேலட்டுகள் கூட மார்க்கெட்டில் விற்பனைக்கு இருக்கு. இன்னமும் புரொபஷனல் மேக்கப் கலைஞர்களிடம் 35க்கும் மேற்பட்ட கலர்கள் அடங்கின பேலட்டுகள் கூட பார்க்கலாம்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Related Stories: