×

கெரியருக்கு கைடன்ஸ் அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே டி.என்.சி.சி.எ. (Tamilnadu career counsellors Association). இதற்காக இங்கே பலரும் ஒருங்கிணைந்துள்ளோம் என நம்மிடம் பேசத் தொடங்கினார் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கெரியர் கைடன்ஸ் வழங்கிவரும் குழந்தைகள் மனநல ஆலோசகர் ஜோதி கொலாத்துர். பல பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு கைடன்ஸ் தருவதற்குப் பதில் இன்பர்மேஷனை வழங்கி வருகிறார்கள். என் கல்லூரியில் இந்தந்த பாடங்கள் இருக்கு என மாணவர்கள் மத்தியில் வந்து சொல்லுவது கெரியர் கைடன்ஸ் கிடையாது. அது மார்க்கெட்டிங். இதனை கெரியர் கைடன்ஸ் என பல கல்வி நிறுவனங்கள் தவறாக பரப்புகிறார்கள்.

கெரியர் கைடன்ஸ் வேற. கெரியர் இன்பர்மேஷன் வேற என்றவர், ஒரு குழந்தையின் பெர்ஷனாலிட்டிக்கு எது ஒத்துவரும் எனத் தெரிந்து அது இந்தெந்த கல்லூரிகளில் படிப்பாக இருக்கின்றது எனச் சொல்ல வேண்டும். அதற்குப் பதிலாக எங்கள் கல்லூரிகளில் இதெல்லாம் இருக்கெனச் சொல்வதெல்லாம் விளம்பரமே.இது எனது விருப்பமாக இருக்கிறது. அதற்காக இதை நான் முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கப் போகிறேன். படித்து முடித்ததும் அது தொடர்பான வேலையில்தான் நான் பணியாற்றுவேன் என்பதே கெரியரைத் தீர்மானிப்பது. இதில்தான் நமக்கான வளர்ச்சி நிறைவாய் இருக்கும். ஆனால் நம் நாட்டில் மாணவர்கள் இப்படியாகவா உருவாக்கப்படுகிறார்கள்.? நாம் பார்க்கும் வேலையும், நமது படிப்பும்  இங்கே வெவ்வேறாக இருக்கிறது.

ஒரு மாணவன் தான் எதை எடுத்துப் படிக்கக் கூடாது என்கின்ற பலவீனத்தை முதலில் தெரிந்துகொள்வது இங்கே முக்கியம். தன் கெரியரில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற ஒரு முழுமையான மதிப்பீடும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இதற்காக மாணவர்களின் பலம் மற்றும் பலவீனம் அறியும் சுய மதிப்பீட்டுத் தேர்வு (self assessment test) அவசியமானதாக இருக்கிறது. இந்தத் தேர்வின் மூலமாக நமது விருப்பம்.. நமது மதிப்பீடு.. நமது திறமை.. நம்மை பிறரிடம் வெளிப்படுத்தும் விதம் (பெர்சனாலிட்டி) இவற்றை வைத்துதான் எதைத் தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை வெற்றிகரமாகச் செல்லும் என்பது வெளிப்படும்.

பலரிடத்திலும் உன் பலம் என்ன உன் பலவீனம் என்ன என்று  கேட்டால்? தன் பலம் எதுவெனத் தெரியாமலே, பலவீனத்தை வரிசையாய் பட்டியலிடுவர். அருகே இருக்கும் அவன் நண்பர்களிடம் கேட்டால் என் நண்பனின் பலம் இதுவென சரியாகச் சொல்வான். நமது ஸ்ட்ரெங்த் இதுவென நமக்குத் தெரிந்தாலும், அதை நாம் வெளிப்படுத்துவதில்லை என்பதே இங்கு நிதர்சனம். அதனால்தான் நான் இதுவாக ஆக வேண்டும் என நினைத்து வேறொன்றாக மாறியிருப்போம். பலரும் இங்கே தான் செய்யும் பணியினை விரும்பிச் சென்று செய்வதில்லை. 30 வயதில் சிலர், நான் ஏன் இந்த வேலைக்குச் செல்கிறேன் என்கின்ற சலிப்பில் இருப்பார்கள். வேலை குறித்த திருப்தியின்மை அவர்களுக்குள் வரும். அதே நேரத்தில் எப்படி புதுசாக ஒன்றை கற்றுக்கொள்வது, புதிதாய் ஒரு வேலைக்கு தன்னை எப்படி மாற்றிக்கொள்வது என்கிற பயமும் அவர்களுக்குள் உருவாகும்.

சிலர் டாக்டர், இஞ்சினியர், வழக்கறிஞர் என புரொபஷனல் படிப்புகளைப் படித்தும் ஏன் வெற்றிப் பெற்றவர்களாக மாறாமல் இருக்கிறார்கள்? சம்பந்தமே இல்லாத படிப்பை படித்து சம்பந்தமே இல்லாத வேலை செய்வதுதான் இதில் முக்கியமான காரணம். பிடித்த வேலை செய்ய நமக்கு ஏற்ற படிப்பை நாம் முதலில் தேர்ந்தெடுக்க  வேண்டும். அப்போதுதான் சும்மா கிடைக்கிற ஏதோ ஒரு வேலையில் போய் உட்காராமல், நமக்கு பிடித்த கெரியரில் வேலை பார்க்க முடியும். இதற்கு மாணவர்களுக்கு சைக்கோமெட்ரிக் டெஸ்ட் (Psychomatrix test) மிகவும் முக்கியம் என்கிறார் இவர்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில்தான் +1ல் எதை அடிப்படையாய் கொண்ட பாடப் பிரிவை எடுத்துப் படிக்கப்போகிறோம் என்கிற முடிவுக்கே மாணவர்கள் வருகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இங்கே மிகவும் அவசியம். இதற்கு பெயரே செல்ஃப் அசெஸ்மென்ட் தேர்வு. மொத்தம் நம்மிடம் இருக்கும் 16 விதமான பெர்சனாலிட்டியில் உன் பெர்சனாலிட்டி இதுதான். இந்தெந்த பாடங்களை நீ தேர்ந்தெடுத்தால் உன் வளர்ச்சிக்கு அது உதவியாய் இருக்கும் என உங்களை செல்ஃப் அசெஸ்மென்ட் செய்ய இதில் 70 கேள்விகள் கொடுக்கப்படும். இதில் ஏ, பி என பதில்கள் இருக்கும்.

இதில் உங்களுக்கான பதிலை டிக் செய்தால் போதும். இதை வைத்தே உங்கள் பெர்சனாலிட்டிக்கு ஏற்ற படிப்பைக் கணிக்கலாம்.தமிழகத்தில்தான் அதிகமான பொறியியல் கல்லூரிகள் 500க்கும் அதிகமாக உள்ளது. இங்குதான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான அளவில் பொறியாளர்கள் வெளியாகுகிறார்கள். இதில் திறமை இல்லாத பொறியாளர்களே அதிகம் உள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒன்றரை மில்லியன் அதாவது 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள் என்றால், அதில் 20 சதவிகிதம் மாணவர்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. மீதியுள்ள 80 சதவிகிதம் மாணவர்களுக்கு வேலையில்லை.

ஏனெனில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்(skill) மாணவர்களுக்கு இல்லை. இவர்கள் பொறியியல் முடித்து ஸ்விக்கி டெலிவரி பாயாகவும், ஓலோ ஓட்டுநர்களாகவும், நகர் சுத்தி தொழிலாளர்களாகவும்  பணி செய்கிறார்கள். இதற்கு இஞ்சினியரிங் படிக்க வேண்டுமா? மேலும் புத்தகத்தில் உள்ளதைப் படிக்க வைக்க எதற்கு இத்தனை பொறியியல் கல்லூரிகள்? படிப்பு என்பது மனப்பாடம் செய்து எழுதி மதிப்பெண்களை  வாங்குவதில்லை.பொறியியல் படித்த ஒரு மாணவனுக்கு டிவி, ரேடியோ ஏன் டியூப் லைட் கூட மாட்டத் தெரிவதில்லை. அதுவே ஐடிஐயில் தொழிற் கல்வி படித்த மாணவன் இதில் கில்லியாக செயல்படுவான். இதுதானே ஸ்கில் டெவலப்மென்ட். ஐடிஐ முடித்து பொறியியல் படித்தவன் அவனுடைய
அனுபவத்தில் உயர் பதவியில் அதிக சம்பளத்தில் உயர்கிறான். நேரடியாக பொறியியல் சேர்ந்தவன் திறன் இல்லாதவனாக ஆரம்ப நிலையில் அடிப்படை ஊதியத்தில் இருப்பது இங்கே கண்கூடு. ஆனாலும் பெற்றோர் தங்கள் குழந்தையை ஐடிஐ.யில் சேர்க்க விரும்புவதில்லை.

தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலே சில மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் முடித்தவர்கள் மட்டுமே லட்சத்தில் இருக்கிறார்கள். இதில் பத்து சதவிகிதம்கூட புதிதாக புரொகிராம் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். வேறுசிலர் பொறியியல் முடித்து மேனேஜ்மென்ட் படிப்பு படிக்க செல்கிறார்கள். ஒருவேளை அந்த மாணவருக்குள் ஓவிய ஆர்வமும் திறமையும் இருந்தால் ஆர்கிடெக்சர் இஞ்சினியரிங் படிப்பை பொறியியல்  பிரிவில் கல்லூரியில் தேர்ந்தெடுத்திருக்கலாமே? நமக்கான பாஷன்(passion) எதுவெனத் தெரிந்து அதையே கெரியராகத் தேர்வு செய்யாததே இதற்கெல்லாம் காரணம். அதேபோல் ஃபேஷன் டிசைனிங் துறை என்பதும் வெறும் தையல் சார்ந்த வேலை மட்டுமே கிடையாது. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் கிரியேட்டிவிட்டி சார்ந்த வளர்ச்சி மிக்க துறை.

அதே போல் என் அம்மாவும் அப்பாவும் டாக்டர் அதனால் நானும் டாக்டர் என்பதே பெரும்பாலான மாணவர்களின் நிலையாக இங்கு  உள்ளது. மருத்துவ பணி செய்யும் பெற்றோரின் குழந்தைகளுக்கு  ப்யூட்டிஷியன் வேலைதான் பிடிக்கிறது.ஆனால் பெருமைக்காக பணத்தைக் கொட்டி எம்.பி.பி.எஸ் படிக்க வைத்துவிட்டார்கள் எனில், அதற்கும் அழகு சார்ந்த டெர்மடாலஜி அண்ட் பிளாஸ்டிக் சர்ஜன் படிப்பு மேற்படிப்பில் இருக்கிறது. அவர்கள் அதை எடுத்துப் படிக்கலாம். நாம் படிப்பதற்குள் இருந்து நம் பாஷனை(passion) தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் இவர். சில மாணவர்கள் ஐஐடி.யில் நுழைய JEE நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள்.

அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் NIIT செல்கிறார்கள். இவை இரண்டிலும் வாய்ப்பு கிடைக்காத எந்த ஒரு மாணவனும் தற்கொலை செய்வதில்லை. அப்படியிருக்க நீட்டில் மட்டும் இத்தனை தற்கொலைகள் எதற்காக என்றவர், மாணவர்கள் நீட் தேர்வை திரும்பத்திரும்ப படித்து எழுதுவது எத்தகைய கஷ்டத்தை தோற்றுவிக்கும். ஒரு முறை முயற்சிப்பது சரி. திரும்பத் திரும்ப முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்.   நீட் தேர்வை எழுத மாணவர்களுக்கு அதன் கான்செப்ட் முதலில் புரிய வேண்டும். இங்கே மாணவர்கள் மருத்துவப்  படிப்பைத் தேர்வு செய்வது வருமானத்திற்காகவா? சேவைக்காகவா..? இல்லை எல்லோர் முன்பும் பெருமையடித்துக் கொள்வதற்காகவா..? ஏன் நீட் தேர்வுக்கு மட்டும் இத்தனை ஹைப் கொடுக்கப்படுகிறது? மற்ற தேர்வுகள் மாதிரியேதானே நீட் தேர்வும்.  வாழ்க்கை முழுவதும் இது மாதிரி தேர்வுகளை நாம் சந்தித்துக்கொண்டேதானே இருக்கப்போகிறோம்.

டாக்டர் வாய்ப்பு கிடைக்கலைனா மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் பிரிவுகள் ஏராளம் இங்கே கொட்டிக் கிடக்கின்றது. அனடாமியில் எம்.எஸ்.ஸி முடித்து பிஎச்டி முடித்தால் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கே அனடாமி விரிவுரையாளராகச் செல்லலாம். பெர்ஃபியூஷன் டெக்னாலஜியில் நுரையீரல் தொடர்பான படிப்பை முடித்தவர்களுக்கு இந்த கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருந்ததுடன் வருமானம் லட்சங்களில் இருந்தது. பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இவைகளும் மருத்துவம் சார்ந்த வேலைதானே. இவற்றைப் படித்தால் மருத்துவக் கருவிகளை நீங்களே கண்டுபிடிக்கலாமே. இங்கே எல்லோருமே டாக்டராக வேண்டும் என்கிற அவசியமில்லையே.

இந்த ஆண்டிலிருந்து ஹெச்சிஎல், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் +2 முடித்த மாணவர்களை ஆன்லைன் தேர்வு வழியே தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சி வழங்க இருக்கிறார்கள். பிறகு மாலை நேர படிப்பாக, பிட்ஸ் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பையும் படிக்க வைக்கப் போகிறார்கள். ஏற்கனவே விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இந்த முறையை செயல்படுத்தி வருகின்றன. பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் ஸ்கில் டெவலப்மென்டும் முக்கியம்  என்பது சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது என்றவாறு விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!