×

நியுஸ் பைட்ஸ்: குழந்தை திருமணம் தகவல் தெரிவிப்பவருக்கு 2500 பரிசு

நன்றி குங்குமம் தோழி

கேரளாவில் குழந்தை திருமணம் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அரசுக்குத் தெரிவிப்பவருக்கு 2500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்கள் சன்மானத்தை நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்க அங்கன்வாடிகளில் மின்னஞ்சல் முகவரியும், தொலைபேசி எண்களும் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரங்களில் பெண்கள் பீட்சா சாப்பிட தடை

ஈரானின் புதிய விதிகளின்படி, இனி தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்கள் பீட்சா சாப்பிடுவது போலவும், குளிர்பானங்கள் அருந்துவது போலவும் காட்சிகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, ஆண்கள் பெண்களுக்கு டீ/காபி வழங்குவதைப் போன்ற காட்சிகளும் இடம்பெறக்கூடாது எனக் கூறப்பட்டதை அடுத்து, மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.   

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் 5000 பரிசு

சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்போருக்கு 5000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.  

வாங்கப் பேசலாம் உரையாடலுக்கான பெஞ்சுகள்

போலந்தில், அந்நியர்களுடன் உரையாடல்களை ஊக்குவிக்கும் விதத்தில் மக்கள் கூடும் இடங்களான பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பெஞ்சுகளில் அமருபவர்கள் ஒருவருடன் மற்றவர்கள் உரையாடி சமூகத்துடனான நட்பை வளர்க்கலாம். இந்த திட்டம், கொரோனாவால் தனிமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்பப்படுகிறது.    

ஆப்கான் பெண் கால்பந்து வீராங்கனைகளுக்கு இங்கிலாந்தில் குடி பெயர அழைப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராகப் பல அடக்குமுறைகளைத் தாலிபான் அறிவித்த நிலையில், பலர் அந்நாட்டைவிட்டு அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அதில் 13-19 வயதான இளம் கால்பந்து வீராங்கனைகள் கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் விடுதியில் தங்கி வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து அரசு சுமார் 35 வீராங்கனைகளையும் அவர்களது குடும்பங்களையும் தங்கள் நாட்டில் குடியேற அழைப்பு விடுத்து, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள் ரோந்து குழுவினரால் குற்றங்கள் குறைப்பு

தில்லியின் வடமேற்கு பகுதியில், சாலைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க, பெண் போலீஸ் - குழுவினர் சாலைகளில் ரோந்து பணிகளில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த குற்றங்கள் 23% குறைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பெண் போலீசாரை ரோந்து பணிகளில் ஈடுபடுத்தியது என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!