×

மருத்துவத்தை நேசிக்கும் யாராலும் சிறந்த மருத்துவராக முடியும்!

நன்றி குங்குமம் தோழி

மருத்துவர் அனுரத்னா

விளிம்புநிலை மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைப்பதே மருத்துவர் அனுரத்னாவின் வாழ்க்கையாக இருக்கிறது. மருத்துவருக்கான பிம்பங்களை தகர்த்து எளிமையான மனுஷியாகவும் தன்னை வெளிப்படுத்துபவர்.ஒரு ஆசிரியரோ, மளிகைக் கடை வைத்திருப்பவரோ, துப்புரவு தொழிலாளியோ நான் இந்த பணியில் இருக்கிறேன் என்று எந்த பந்தாவும் காட்டுவதில்லை. அப்படியிருக்க மனித உயிர்களின் மீதான கூடுதல் பொறுப்பு என்பதைத் தவிர்த்து, மருத்துவத்தில் மட்டும் ஏன் நான் டாக்டர் என பந்தா காட்ட வேண்டும் என்று நம்மிடம் பேச ஆரம்பித்தவர்... தமிழக அரசு வழங்கிய சிறந்த மருத்துவருக்கான விருது மற்றும் பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகள் எனத் தொடர்ந்து விருதுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராகவும் இருக்கிறார்.

நான் நீட் தேர்வெழுதி மருத்துவம் படிக்காதவள். நீட் எழுதி வருபவன் தான் புத்திசாலி போன்ற பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறு. மருத்துவத்தை நேசிக்கும் யாராலும் மருத்துவக்கல்வி கற்க முடியும். சிறந்த மருத்துவராக மாற முடியும். என் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவள்தான் நான். இளங்கலை மருத்துவத்தை நான் இந்தியாவில் படிக்கவில்லை என்றாலும், என் மருத்துவ அறிவு, எனது சிகிச்சை முறை, அறுவை சிகிச்சையில் என் நிபுணத்துவம் குறித்து நான் யார் என்பதை என்னிடம் பயன்பெறும் மக்கள் கூறுவர் என்று தன்னம்பிக்கையுடன் பேசிய டாக்டர் அனுரத்னா ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருக்கிறார்.

பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்பதைத் தாண்டி, பணி நேரம் தவிர்த்து, ஊர் ஊராக, வீடு வீடாக மக்களை நோக்கி பயணிக்கிறார். ‘அக்கா, அத்தை, அம்மா’ எனக் கிராமத்துப் பெண்கள் இவரை உறவு சொல்லி அழைக்கிறார்கள். எல்லா வீடுகளுக்குள்ளும் உரிமையோடு நுழைந்து, நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவது, இடைநிற்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் முயற்சிகளை செய்வது, குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது என மக்கள் எளிதில் அணுகும் மருத்துவராகவும் வலம் வருகிறார்.

அவரிடத்தில் மேலும் பேசியபோது..

‘‘பிறப்பு இறப்பு இரண்டையும் அருகே இருந்து பார்ப்பதால் வாழ்க்கை எனக்கு யதார்த்தமாகிவிட்டது. அதனால்தான் எளிய மக்களையும் மிக இயல்பாக என்னால் அணுக முடிகிறது. மருத்துவம் வணிகமயமான சூழலில் குடும்பத்தில் செலவை அதிகம் வைக்கும் ஒன்றாக மாறி விட்டது.  இங்கே பணம் வைத்திருப்பவனின் உயிர் காப்பாற்றப்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு உடல்நிலையில் கூடுதலாய் ஒன்று என்றால் சேர்த்து வைத்த நகை, பணத்தை இழப்பதுடன், சொத்தையே விற்கும் அளவுக்கு நிலைமை இங்கே மோசமாகி, ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற வார்த்தைகள் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது’’ என்றவர் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தினார். ‘‘சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி எனது சொந்த ஊர்.

அம்மா பெயர் மங்கையர்கரசி. அப்பா கல்லூரி விரிவுரையாளர். அம்மா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வுமன் ஸ்டெடிஸ் துறையில் இணைந்து பெண்ணியம் சார்ந்து நிறைய செயல்திட்டங்களை செய்தவர். என் கணவரும் கல்லூரி விரிவுரையாளர்தான். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் பள்ளியில் படிக்கின்றனர்.எனது ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, என் வீட்டைத் தாண்டியே நான் படித்த பள்ளிக்கூடம் இருந்தது. படிக்கும் காலத்தில் ஊர், சேரி, ஊருக்குள் இருந்த ஏற்றத்தாழ்வுகள் என்னை கேள்விக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க, மனிதர்களுக்குள் இருக்கும் இந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை அம்மா என்னிடம் தெளிவுப்படுத்தினார். அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மூடநம்பிக்கைக்கு எதிரானவராய் இருந்தார். கடவுள் பெயரால் பிரிவினைகளை உண்டாக்குவது, ஏமாற்றுவது இதெல்லாம் அவருக்கு பிடிக்காது. ஆண், பெண் பாலினத்தையும் பிரித்து வைத்தே கல்வி பயில வைப்பதையும் நான் கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருந்தேன்.

பள்ளியில் நான் நன்றாக படிக்கும் மாணவி அவ்வளவே. எனது +2 தேர்வு நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதில் தேர்வு எழுதுவது எனக்கு சிக்கலானது. மருத்துவத் தேர்வுக்கான மதிப்பெண் குறையவே, ரஷ்யா நாட்டுக்குச் சென்று 7 வருடம் இளங்கலை மருத்துவம் படித்தேன். மீண்டும் இந்தியா திரும்பி 2006ல் அரசுப் பணிக்குள் வந்தேன். 2008ல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை முடித்து, 2014ல் பொன்னேரி தாலுகா மருத்துவமனையில் அரசு மருத்துவராகப் பணியில் இணைந்தேன்.

அப்போது பொன்னேரி மருத்துவமனைக்கும்... மக்களுக்கும்... எங்களுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை குறைப்பதே என் முதல் நோக்கமாக இருந்தது. அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், தனியார் மருத்துவமனைக்குச் செல்பவர்கள் அதிகமாகவும் இருந்தனர். எனவே பொன்னேரி அரசு மருத்துவமனையை வலுப்பெறச் செய்ய முடிவெடுத்தேன். அரசு மருத்துவமனையை பயன்படுத்த எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை முதலில் உடைக்கும் முயற்சிகளை கையில் எடுத்தேன்.

மக்களிடம் இது நம் வரிப்பணத்தில் உருவான நமது அரசு மருத்துவமனை. உங்களுக்கான மருத்துவமனை. இங்கிருக்கும் ஊழியர்களுக்கான ஊதியம் உங்கள் வரிப்பணத்தில் இருந்தே கொடுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின்  உரிமையாளர்கள் மக்களாகிய நீங்களே என்கிற உணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதில் வெற்றியும் கிடைத்தது. மருத்துவர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல.

நீ எந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்திருக்கிறாயோ அதே சமூகத்தில்தான் நானும் பிறந்த வளர்ந்து வந்திருக்கிறேன். நானும் சக மனுஷிதான் என்கிற நம்பிக்கையை தொடர்ந்து ஏற்படுத்தி, ‘என்னைக் கேள்வி கேளுங்கள்’ எனச் சொல்லியே மக்களை நெருங்கினேன்.  ‘மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள்  சரியாக வேலை செய்யவில்லையா ஏன் என கேள்வி கேளுங்கள். உங்களுக்கான மருந்து மாத்திரைகள் இங்கு கிடைக்கவில்லையா? அதையும் உரிமையாகக் கேளுங்கள். எங்கு கிடைக்கும் எனக் கேட்டு அங்கிருந்து வாங்கித்தரச் சொல்லுங்கள்’ என அவர்கள் உரிமையை பற்றியும் பேச ஆரம்பித்ததுமே, அரசு சுகாதார நிலையம் மீதான நம்பிக்கையில் மக்கள் மருத்துவமனைக்குள் கொஞ்சமாக எட்டிப் பார்க்கத் தொடங்கினர்.

அடுத்த கட்டமாக, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் இடமாய் இருந்த மருத்துவமனை வளாகமும், கழிவறைகளும் சுத்தமானது. சுற்றுப்புறம் பசுமையாக இருக்க வளாகத்திற்குள் நிறைய மரம் செடிகளை வளர்த்தோம். மக்களை நெருங்குவதற்கு சமூக வலைத்தளங்கள் துணை நிற்க, எனக்கான ஒன்றாக வலைத்தளங்களை மாற்றி பொன்னேரி மருத்துவமனையின் சிறப்புகள், என்னென் வசதிகள் உள்ளது என ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தத் தொடங்கினேன். மருத்துவ சுற்றறிக்கை, முகாம்கள் குறித்த தகவல்கள் என எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றேன். நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்குமான இடைவெளி குறைந்தது.

உள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, வெளி நோயாளி பிரிவிலும் மக்கள் அதிகம் வரத் தொடங்கினர். அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அறுவை சிகிச்சைகள் அதிகரித்தன. மருத்துவத்தையும், மருத்துவரையும் முழுசா நம்பினால்தானே மக்கள் நம்மைத் தேடி வருவார்கள். எவ்வளவு பெரிய நோய்க்கும் அரசு மருத்துவமனையில் தீர்வுகள் உண்டு’’ என்றவர், மிகக் கடினமான கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக முடித்த கையோடு நம்மிடம் பேசிக் கொண்டிருப்பதையும் பதிவு செய்தார்.

‘‘மருத்துவமனை ஊழியர்களிடத்திலும், இது நம் உழைப்புக்கு ஊதியம் வழங்கும் இடம். இதனை நாம் சரியாகக் கையாளவில்லை என்றால் நமக்குதான் வேலையில்லை. எனவே உயிர் காக்கும் இந்த மக்கள் பணியை சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரியவைத்தேன். மக்கள் நம்மை அணுகும்போதும், நம்மிடத்தில் கேள்வி கேட்கும்போதுதான் நமது செயல் சரியான ஒன்றாக மாறும். நாம் மளிகைக் கடையை சொந்தமாக வைத்துக்கொண்டு எதிர் கடையில் பொருள் வாங்கினால் எப்படி? எனவே நாமும் இங்குதான் மருத்துவம் பார்க்க வேண்டும். நாளையே உங்கள் வீட்டில் யாருக்கும் உடல் நிலை சரியில்லை என்றாலும் உரிமையோடு இங்கு வரலாம் என்கிற எண்ணத்தையும் மருத்துவமனை ஊழியர்களிடத்தில் விதைத்தேன்.

இப்போது மக்களுக்கும் எங்களுக்கும் இடையிலும், எனக்கும் ஊழியருக்கும் இடையிலும், எனக்கும் அரசுக்கு இடையிலும் இடைவெளி என்பதே இல்லை. நேரடியாக யாரும் யாரையும் அணுகலாம். வசதி வாய்ப்புகளைக் கேட்டால் அரசும் என்னை நம்பி செய்யத் தயாராகவே உள்ளது’’ என்றார்.சமீபத்தில் நிகழ்ந்த நீட் மரணங்கள் குறித்துப் பேசியவர், ‘‘நமது கல்விமுறை நம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைத் தரவில்லை. சமச்சீர் கல்வியை கற்பிப்பதிலே அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, கிராமப்புற பள்ளி, நகர்ப்புற பள்ளிகளுக்கு இடையே வித்தியாசம் உள்ளது. சமச்சீர் பாடநூல்கள் இருக்கு. ஆனால் சமச்சீர் பாடத் திட்டம் இருக்கிறதா? அவை நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கிறதா? இங்கே சாலை வசதி இல்லாத, இணைய வசதி இல்லாத கிராமங்களும் இருக்கும்போது, கல்வி முறை ஒரே மாதிரியானதாக இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வு மட்டும் எதற்கு? நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் எதற்கு?

கல்வி இங்கே வியாபாரமாகிவிட்ட நிலையில், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் சேமிப்பைத் தொலைத்தவர்களே அதிகம். மேலும் ஏட்டில் படிக்கும் எதுவும் மருத்துவத்துக்கு உதவாது. இங்கே கோல்டு மெடல் வாங்கிய எல்லோரும் சிறந்த மருத்துவர்களும் அல்ல. நோயாளியை அதிகம் படித்தவர்களே சிறந்த மருத்துவர்கள். அது ஒரு கலை. நோயாளியை சந்திக்க சந்திக்க.. பார்க்க பார்க்க.. பரிசோதனைகளை மேற்கொள்ள மேற்கொள்ளதான்.. அந்தக் கலை வசப்படும். இதற்கு தேவை பொறுமை. அர்ப்பணிப்பு. நேரத்தை அதிகம் செலவிடுவது என்றவர் இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லைதான். மருத்துவத்தின் மீதுள்ள ஈடுபாட்டால், என் இருத்தலை நான் எங்கிருக்கிறேன் என்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருக்கிறேன். அப்போது மருத்துவம் சார்ந்து என் உதவி  யாருக்கும் தேவைப்படலாம் இல்லையா’’ என்றவர்...

‘‘கல்வியும் மருத்துவமும் அடிப்படை உரிமை. இவை இரண்டும் நம் நாட்டில் அரசுடமையாக்கப்பட்டு இலவசமாக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளையும் இணைத்துக்கொண்டு அரசு செயலாற்ற வேண்டும். இதற்கு கியூபா நாடே உதாரணம். கியூபா ஒரு சின்ன நாடுதான். ஆனால் அங்கிருக்கும் மருத்துவமனைகள் அனைத்தும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குகின்றன’’ என்றவர், கொரோனா மூன்றாவது அலை குறித்த நமது கேள்விக்கு, மூன்றாவது அலை எதிர்பார்த்த ஒன்றுதான். அக்டோபரில் அதிகமாக வாய்ப்பு இருந்தாலும், பயப்படத் தேவையில்லை. வந்தால் சமாளிக்கத் தேவையான கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளது என்றவாறு  விடைபெற்றார்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!