×

ஃபேஷன் A - Z

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும்  ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

கடந்த இதழ்களில் நான் அணிகலன்களின் வகைகள், அதன் முக்கியத்துவம் மற்றும் ஆண்களுக்கான அணிகலன்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இதழில் பெண்கள் கழுத்தில் அணியும் நெக்லெஸ் மற்றும் செயின் குறித்து தெரிந்து கொள்ளலாம். பெண்கள் பொதுவாக டிசைன் டிசைனாக உடைகள் வாங்குவார்கள். அதே சமயம் உடைகளுக்கு ஏற்ப அணியும் அணிகலன்கள் ஒருவரின் தோற்றத்திற்கு மாறுபட்ட ஸ்டைலினை பிரதிபலிக்கும். உங்கள் கப்போர்ட் நிறைய துணிகள் இருந்தாலும் அவை அனைத்திற்கும் நுணுக்கமான தோற்றத்தை தருவது அணிகலன்கள் மட்டும் தான். அதே சமயம் தனியாக கைப்பை, கண்ணாடி அல்லது ஸ்கார்ப் என்பதை பார்க்கும் போது அது பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் அதையே மேட்சிங்காக உடைக்கு அணியும் போது அதன் தோற்றம் வித்தியாசமான அமைப்பை கொடுக்கும்.

மிகவும் சாதாரண காட்டன் உடைகள் அணிந்தாலும், அதனுடன் சேர்ந்து அணியும் அணிகலன்கள் தான் அந்த உடைக்கு ரிச் லுக்கினை தரும். இதற்கு சிறிய அளவில் திட்டமிட வேண்டும். இன்றைய ஃபேஷனாக என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பெண்கள் கழுத்தில் அணியும் செயின்கள் பல வகை உள்ளன அவற்றை எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப உடைகள் மட்டுமில்லாமல் அணிகலன்களும் மாறுபடும். ஃபேஷன் உலகில் ஒருவரை தனித்துவமாக முன்னிலைப்படுத்த அணிகலன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த உடை அணிந்தாலும், அதற்கு ஏற்ப சரியான அணிகலன்களை அணியும் போது தான் பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். உங்களின் முகத்தோற்றத்திற்கு ஏற்ப சரியான நகைகளை தேர்வு செய்து அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரவு நேர பார்ட்டியோ, நண்பர்களுடன் சந்திப்ேபா அல்லது திருமண வரவேற்போ எதுவாக இருந்தாலும், நீங்கள் அணிந்திருக்கும் நகை தான் அங்குள்ள அனைவரின் கவனத்தை ஈர்க்கும்.

ஒவ்வொருவரின் கழுத்து மற்றும் அதன் அமைப்பு வித்தியாசப்படும் என்பதால், அதற்கு ஏற்ப நகைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். சிலருக்கு நீளமான ஆரம் அணிந்தால் அழகாக இருக்கும். சிலருக்கு கழுத்தை ஒட்டி அணியும் நெக்லெஸ் பாந்தமாக இருக்கும். நல்ல உயரமாக குண்டாக இருப்பவர்கள் பெரிய கற்கள் பதித்த நெக்லெஸ் அணிய விரும்புவார்கள். ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருப்பவர்கள் சிறிய கற்கள் பதித்த முத்து மற்றும் ரூபி பதித்த நெக்லெஸ்களை விரும்புவார்கள். ஒவ்வொரு அணிகலன்களும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், அவற்றை அணியும் போது ஒருவருக்கு வேறு ஒரு தோற்றத்தினை கொடுக்கும்.

பெண்களின் அணிகலன்களில் மிகவும் முக்கியமானது அவர்கள் கழுத்தில் அணியும் நெக்லெஸ் அல்லது செயின். இதில் பல வகை டிசைன்கள், வடிவங்கள் இருப்பதால், எது அணியும் போது சிறப்பாக இருக்கும் என்று தீர்மாணிப்பது கடினம். பொதுவாக பெண்கள் கழுத்தில் மெல்லிய செயினை அணிந்திருப்பார்கள். அதை அணிவதால் மற்ற ட்ரெண்டி டிசைன்களை அணியமுடியாது என்று ஒதுக்கிவிடவேண்டாம்.

ஒவ்வொரு பெண்ணும் தன் கழுத்தின் அமைப்பு மற்றும் உடையின் நெக்லைனை புரிந்து கொண்டு, அதற்கான செயின் எப்படி அணியலாம் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். செயின்கள் பல அளவுகள் மற்றும் டிசைன்களில் உள்ளன. அதற்கு ஏற்ப தான் நாம் அணியும் உடைகளுக்கு அதனை மேட்ச் செய்ய முடியும்.=சோக்கர் : சோக்கர் 14 முதல் 16 இஞ்ச் அளவில் இருக்கும் சிறிய வடிவ செயின். கழுத்தை ஒட்டியபடி அணியப்படும் இந்த சோக்கர் வகை செயின்கள் இப்போது மறுபடியும் ஃபேஷனாகி வருகிறது.

*பிரின்செஸ் : கழுத்துக்கு கீழ் மற்றும் கழுத்து எலும்பினை சுற்றி அணியப்படும் நெக்லெஸ் வகை. அழகான வைர நெக்லெஸ் மற்றும் பெரிய டாலர் கொண்ட செயின் வகை தான் இந்த பிரின்செஸ்.

*மேட்னி : 20 முதல் 24 இஞ்ச் நீளம் கொண்ட நெக்லெஸ். சோக்கரை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். இது நெஞ்சு பகுதி நீளம் வரை வரும்.

*ஓப்ரா : 24 முதல் 32 நீளமுடைய நெக்லெஸ். இதனை இரண்டு பட்டையாகவும் அல்லது நீளமாகவும் அணியலாம்.

*ரோப் : 32 இன்சுக்கு மேல் நீளமாக இருக்கும் இந்த செயின் அல்லது நெக்லெசினை ரோப் என்று அழைப்பார்கள். இந்த நெக்லெஸ் பல அடுக்கு செயின்கள் கொண்டு வருவது வழக்கம்.

சிலருக்கு ஒரு சில நெக்லெஸ் தான் பார்க்க எடுப்பாக இருக்கும். அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள அவர்கள் அணியும் உடையின் நெக்லைன் அதாவது உடையின் கழுத்துப் பகுதி அமைப்பினை பற்றி புரிந்து கொள்வது அவசியம்.

*உங்களின் உடையின் கழுத்தமைப்பிற்கு ஏற்ப நெக்லெசினை தேர்வு செய்வது அவசியம்.

*உடையின் நெக்லைன் மிகவும் கீழே இறங்கி இருந்தால், செயின் நீளமாக இருக்க கூடாது.

*உடைகளில் மேல் பகுதியில் அதிகமான டிசைன்கள் இருந்தால் அதை மறைக்கும் வகையில் நெக்லெஸ் அணிய வேண்டாம்.

*உடையின் நெக்லைனிற்கும் நீங்கள் அணியும் செயினுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

*அகண்ட நெக்லைன் கொண்ட உடை அணிந்திருந்தால், அதை குறுகலாக எடுத்துக்காட்டும் செயின்களை அணியலாம்.

உடையில் ‘வி’ வடிவ நெக்லைன் இருந்தால் அதற்கு அதே ‘வி’ வடிவுடைய செயின் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். அதே சமயம் அந்த செயினின் அளவு உடையின் நெக்லைனுக்கு மேல் இருக்க வேண்டும். வட்டவடிவு நெக்லைன் என்றால், உங்களின் நெக்லெசும் அதே வடிவத்தில் தான் இருக்க வேண்டும். இதற்கு ‘வி’ வடிவ செயின் அணியக்கூடாது.

கழுத்தை ஒட்டி அணியப்படும் வட்ட வடிவ நெக்லைன் (crew neckline) கொண்ட உடை அணியும் போது அதற்கு நீளமான நெக்லெஸ் அல்லது கழுத்திற்கு கீழே வரை வரும் நீளமான நெக்லெஸ் அணியலாம். கழுத்தை சுற்றி மறைக்கும் படியான அகண்ட நெக்லெசும் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். கழுத்தை ஒட்டி அணியப்படும் ரிவேரா என்ற வகை நெக்லெஸ் இதற்கு பெர்பெக்டாக மேட்சாக இருக்கும்.

அகண்ட வட்ட வடிவம் கொண்ட நெக்லைன் (scoop neckline) உடைகள் கழுத்தின் எலும்பு பகுதியை அழகாக எடுத்துக்காட்டும். வட்ட வடிவம் கொண்ட செயின் அல்லது நெக்லெசினை அணியலாம். நீளமான செயின் அழகாக இருந்தாலும், உடையின் நெக்லைனை விட நீளமாக இருக்க கூடாது. பிப் நெக்லெஸ் (bib necklace) இந்த உடைக்கு சூப்பர் மேட்சிங்காக இருக்கும். கழுத்தை சுற்றி அணியக்கூடிய ஹால்டர் வகை நெக்லைன் கொண்ட உடைகள் உங்களின் தோள்பட்டையினை குறுகியும் மார்பு பகுதியினை அகண்டும் காண்பிக்கும். நீளமான மெல்லிய செயின் மற்றும் சிறிய டாலர் வகை செயின் இந்த உடைக்கு பாந்தமாக பொருந்தும். இந்த உடைகள் தோள்பட்டையினை குறுகலாக எடுத்துக்காட்டும் என்பதால், ‘வி’ வடிவ செயின் அணிந்தால் அழகாக இருக்கும்.

கழுத்தை முற்றிலும் மறைக்கக்கூடிய டர்டில் நெக்லைன் (turtle neckline) கொண்ட உடைக்கு அடுக்கு அடுக்காக இருக்கும் நீளமான டாலர்கள் கொண்ட செயின் அணியலாம். ஸ்வீட்ஹார்ட் உடைக்கு அதன் நெக்லைன் முற்றிலும் சுற்றி வருவது போன்றும் மற்றும் நெஞ்சுப் பகுதி வரை நீளம் இருக்க வேண்டும்.சதுர வடிவ நெக்லைன் கொண்ட உடைக்கு அதே வடிவம் அல்லது சதுர வடிவம் டாலர்கள் கொண்ட செயின்கள் நன்றாக இருக்கும்.

அகண்ட் நெக்லைன் அல்லது ஸ்ட்ராப்லெஸ் உடைகளுக்கு கழுத்தை சுற்றி அணியக்கூடிய அகண்ட மற்றும் பெரிய டாலர்கள் கொண்ட செயின் அணியலாம். அந்த செயின் உங்களின் தோள்பட்டை அளவு மட்டுமே இருக்க வேண்டும். போட் நெக்லைன் கொண்ட உடைக்கு பிரின்செஸ் மற்றும் மாட்னி டிசைன்  அணியலாம். அதிக லேயர்கள் கொண்ட கவுல் வகை உடைக்கு சிறிய டாலர் கொண்ட மெல்லிய செயின் அணிந்தால் அழகாக இருக்கும். சில சமயம் இந்த உடையின் நெக்லைன் பெரியதாகவும், கழுத்தை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்தால், செயினை தவிர்த்து கம்மல் மட்டும் அணியலாம்.

காலர் டிசைன் கொண்ட உடைகளைப் பொறுத்தவரை இதற்கு ஏற்ப செயினை தேடி அணிவது கொஞ்சம் சவாலான விஷயம். மெல்லிய செயின் மற்றும் டாலர் கொண்ட செயின் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

டிஷர்ட் அணியும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்

*பெரிய டிசைன் அல்லது எழுத்துக்கள் கொண்ட டிஷர்ட்டுக்கு மெல்லிய செயின் அணியலாம்.

*வெள்ளை நிற டிஷர்ட்டுக்கு பிப் அல்லது இரண்டு லேயர்கள் கொண்ட செயின்.

*உடலை இறுக்கமாக பிடிக்காமல், தளர்வாக இருக்கும் டிஷர்ட்களுக்கு நிறைய லேயர்கள் அல்லது நீளமான டாலர் கொண்ட செயின் அணியலாம்.

* டான்க் டிஷர்ட் வகைகளுக்கு சோக்கர் அல்லது காலர் நெக்லெஸ் அணியலாம்.

நெக்லெஸ் அல்லது செயின் அணியும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்

*அணியும் உடைக்கு இணையான அணிகலன்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக டாலருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நெக்லெஸ் அணியும் போது, அது உங்களின் ஸ்டைலுக்கு சூட்டாகிறதா என்று கவனிப்பது அவசியம்.

*உங்கள் மேலாடையில் அதிக அளவிலான டிசைன்கள் இருந்தால், நீங்கள் அணியும் செயின் எளிமையாக இருப்பது அவசியம்.

*நீங்கள் அணியும் அணிகலன்கள் உங்களின் முக அமைப்பினை மாற்றி அமைக்கக் கூடாது. அதாவது ஓவல் வடிவ முகத்தினை மேலும் நீண்டு காண்பிக்க கூடாது, அதே போல் வட்ட வடிவ முகத்தினை மேலும் குறுகலாக எடுத்துக்காட்டக்கூடாது.

*மிகவும் பெரிய டாலர்கள் கொண்ட ஸ்டேட்மென்ட் வகை செயின்கள் அணியும் போது, அதற்கு இணையாக சிம்பிளான காதணிகள் அணியலாம். காதணிகளும் பிரமாண்டமாக இருந்தால், அது உங்களின் தோற்றத்தினை முற்றிலும் மாற்றி அமைக்கும். எப்பொழுதும் பெரிய கம்மல் அணிந்தால் அதற்கு சிம்பிளான செயின் அணிய வேண்டும். அதேபோல் பெரிய செயின் அணியும் போது காதணிகள் எளிமையாக இருக்க வேண்டும்.

உடைக்கு ஏற்ப செயின் அணிவது ஒரு பக்கம் இருந்தாலும் மற்ற சில காரணிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு முழுமையான நேர்த்தியான தோற்றத்தினை பெற முடியும்.

முக அமைப்பு : ஓவல் வடிவ முக அமைப்புள்ளவர்கள் நீளமான செயின் அணியலாம். நீளமான மற்றும் செவ்வகம் வடிவமுடைய முக அமைப்பு கொண்டவர்கள் சிறிய வடிவ செயின் அணியலாம். வட்ட வடிவ முகத்தோற்றம் கொண்டவர்கள் நீளமான நெக்லெஸ் அணியலாம். அதே சமயம் அவர்கள் தங்களின் உடலமைப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வட்ட வடிவ முகத் தோற்றம், குள்ளமான உருவம் மற்றும் அகண்ட மார்பகம் கொண்டிருந்தால் பிரின்செஸ் அல்லது மேட்னி செயின் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். இருதய வடி முகத்தோற்றம் கொண்டவர்கள் சிறிய நெக்லெஸ் அணியலாம்.

உடல் அமைப்பு : உயரமான மற்றும் மெல்லிய தேகம் கொண்ட பெண்களுக்கு நீளமான மேட்னி மற்றும் ஓபரா நெக்லெஸ் அழகாக இருக்கும். குறுகிய கழுத்துடையவர்களுக்கு சோக்கர் எடுப்பாக இருக்காது. அவர்களுக்கு கழுத்து எலும்பிற்கு கிழே விழுக்கூடிய நீளமான நெக்லெஸ் அழகாக இருக்கும். குண்டாக இருக்கும் பெண்கள் பிரின்செஸ் அல்லது தோள்பட்டை நீளமுள்ள நெக்லெஸ் அணியலாம். நல்ல வடிவம் கொண்ட பெண்கள் என்றால் அவர்கள் நீளமான நெக்லெஸ் அணியலாம். அவர்களை மேலும் உயரமாகவும் அவர்கள் வடிவத்தை அழகாகவும் எடுத்துக்காட்டும்.

சிகை அலங்காரம்: உங்களின் சிகை அலங்காரம் முகத்தோற்றத்தை மாற்றுக்கூடியது. கொண்டை ஹேர்ஸ்டைல் என்றால், உங்களின் முக அமைப்பிற்கு ஏற்ப நெக்லெஸ் தேர்வு செய்வது அவசியம். இறுக்கமான உடை, நீளமான காற்றில் பறக்கும் கேசம் என்றால், உங்களின் மார்பக அளவு நீளமான செயின் அணிந்தால், அனைவரின் கண்களும் உங்கள் பக்கம் தான் இருக்கும். நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ப அணிகலன்களை தேர்வு செய்ய வேண்டும். நீளமான செயின் எப்போதுமே ஒருவரை நேர்த்தியாக எடுத்துக்காட்டும்.

அதிக பிரில்ஸ் மற்றும் லேஸ் வகை உடைகள், பெரிய கற்கள் அல்லது மணிகள் கொண்ட பெரிய காதணிகள் மற்றும் அதிக வேலைப்பாடு மற்றும் போ டிசைன் கொண்ட உடைகளுக்கு செயின் அணிவதை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் ஃபேஷன் உலகில் பொதுவாக கடைப்பிடிக்கக் கூடிய விதிகள். இதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களின் விருப்பம் மற்றும் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ப்ரியா

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!