×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* சுண்டல் செய்த பிறகு ஓமம் பொடி, வேகவைத்த கார்ன், வெங்காயம், கேரட், கொத்தமல்லி என வெரைட்டியாக தூவி அம்சூர் பவுடர் கலந்து கொடுக்க சுவையோ சுவைதான்.
* சுண்டல் மேல் கலர் தேங்காய் சீவல், சீஸ் துருவல், பனீர் என ஏதாவது ஒன்றை கலந்து செய்ய சுவையாய் இருக்கும்.
* இனிப்பு சுண்டலுக்கு பாகு வைக்கும்போது வறுத்த தேங்காய் சீவல், சுக்கு, ஜாதிக்காய் பொடி தூவி கொடுக்க நன்றாக இருக்கும்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

* பாசிப் பருப்பு சுண்டலுக்கு பாசிப் பருப்பு குழையாமல் முத்து முத்தாக இருக்க பருப்பை வறுத்து ஊறவைத்து கொதிக்கும் நீரில் போட்டு மூடிவைத்து சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு தாளித்தாலே போதும்.
* கொண்டைக் கடலை தண்ணீரில் நன்றாக ஊறியதும் வெயிலில் ஒரு மணி நேரம் வைத்து விட்டு வேக வைத்தால் சுண்டல் குண்டு குண்டாக இருக்கும்.  
* தனியா, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு சுண்டல் செய்து இறக்கியதும், இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவிக் கிளறினால் சுவை கூடும்.
* பட்டாணி சுண்டல் வேக வைக்கும்போது கொஞ்சம் எண்ணெயும் கொஞ்சம் சர்க்கரையும் போட்டு வேகவைத்தால் சுவையும், மணமாகவும் இருக்கும்.

- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம். தயிரில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து கலந்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இக்கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால், மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விரும்பினால் கேரட் துருவல், காரா பூந்தியையும் மேலே தூவலாம்.
* துவரம் பருப்புடன் 2 மஞ்சள் பூசணித்துண்டுகள் (அ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
* வடை தட்டும் போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

* முள்ளங்கி சாம்பார் செய்யும் போது சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கியபின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
* வெண் பொங்கல் செய்து இறக்கியதும்  குக்கரைத் திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் வெண்பொங்கல் சுவையாக இருக்கும்

- ச. லெட்சுமி, தென்காசி.

* பருப்பு வகைகள் வைக்கும் பாத்திரங்களில் சிறிது சோம்பைப் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* பட்டாணி, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்தால் முளைவிடாமல் இருக்கும்.
* வடைக்கு உளுந்து ஊறவைக்கும்போது சிறிது பச்சரிசி கலந்து அரைத்தால் வடை எண்ணெய் குடிக்காது.

- ஆர்.பிரசன்னா, திருச்சி.

* கத்தரிக்காய் எண்ணெய் பொரியல் செய்யும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் காய் கருத்துப் போகாமல் இருக்கும்.
* தேங்காயுடன் 1 டம்ளர் பால்விட்டு அரைத்து தேங்காய் பர்ஃபி செய்தால் பர்ஃபி வெள்ளையாக இருக்கும்.

- மாலா பழனிராஜ், சென்னை.

* பால்கோவா காய்ச்சும் போது பாலில் ஒரு உருளைக் கிழங்கை தோல் சீவி நறுக்கிப் போட்டு விட்டால் பாலோடு வெந்து குழைந்து கோவா ஆகிவிடும். சுவையாகவும் இருக்கும்.
* தக்காளியை  உப்பு  தண்ணீரில் போட்டு  இரவு முழுவதும் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

* தேங்காய்ப்பூ துருவலைச் சிறிது லேசாக வறுத்துப் போட்டு அதிரச மாவுடன் கலந்து செய்ய எண்ெணய் அதிகம் குடிக்காது.
*கோதுமை, மைதா அல்வா செய்யும்போது நீர்த்து விட்டால் சோளமாவைக் கரைத்துச் சேர்த்தால் கெட்டியாகிவிடும்.

- கே.ஆர். உதயகுமார், சென்னை.

ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை

ஊற வைத்த ஜவ்வரிசி - 3 கப்,
வறுத்து பொடித்த வேர்க்கடலை - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
பெருங்காயம் - 2 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 2,
வெங்காயம் - 1,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - சிறிதளவு,  
தாளிக்க - கடுகு,
உளுந்தம் பருப்பு - ½ டீஸ்பூன்.

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு, சிறு தீயில் வதக்கவும். 3/4 பாகம் வெந்ததும் தேங்காய்த்துருவல், உப்பு, வேர்க்கடலை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!