இட்லி எல்லோருக்கும் பிடிச்ச உணவு!

நன்றி குங்குமம் தோழி

அக்கா கடை

2020 நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் துன்பங்களை சந்தித்த வருடம். பலர் உடல் நலத்தினால் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு நிரந்தரமாக வேலையே இல்லாமல் போனது. கடந்த ஆண்டு கை நிறைய சம்பளத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்த தியாகராஜனுக்கு துணையாக அவர் மனைவி ஆஷா, தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பக்கபலமாக நின்று இப்போது தங்களுக்காக ஒரு சிறிய அளவில் உணவகம் ஒன்றை துவங்கி சாதித்துள்ளார். சென்னை மாத்தூர் அருகே ‘ஆஷாஸ் கஃபே’ என்ற பெயரில் ஃபுட் டிரக் ஒன்றை தம்பதியினர் இருவரும் சேர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இவர்களின் உணவகத்தில் இட்லிதான் சிறப்பம்சம்.

‘‘கடையை ஆரம்பிச்ச போது நிறைய இட்லியை வேஸ்ட் செய்திருக்கேன். காரணம், எனக்கு அப்போது இட்லி மாவு அரைக்கும் பதம் தெரியல. மேலும் மாவு நல்லா புளிச்சா தான் இட்லியும் மிருதுவா இருக்கும். அந்த பக்குவமும் எனக்கு தெரியல. அதன் பிறகு பலரின் ஆலோசனைப்படி தான் இட்லி மாவு அரைக்கவே கத்துக்கிட்டேன். சொல்லப்போனா, எங்க கடையில் மற்ற உணவுகளை விட இட்லி தான் அதிகமா விற்பனையாகிறது. கிட்டத்தட்ட இரவு 11 மணி வரை எங்க கடைக்கு இட்லிக்காகவே தேடி வராங்க’’ என்று தன் கடை ஆரம்பித்த பயணம் பற்றி விவரித்தார்.

‘‘என் கணவர் ஒரு வெண்டார் நிறுவனத்தில் ஐ.டி மற்றும் நிர்வாக துறையிலும் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா போது, அவரது நிறுவனத்தில் பாதி சம்பளம் தான் கொடுத்தாங்க. அதாவது, இதுநாள் வரை நிரந்தர ஊழியராக இருந்தவர் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் கான்ட்ராக்ட் ஊழியராக மாற்றப்பட்டதால், போனஸ், பி.எஃப் போன்ற எந்த சலுகைகளும் கிடையாது. இருந்தாலும் அந்த நேரத்தில் வேறு வேலைக்கும் மாற முடியாது.

அதனால் நிலைமை மாறும் வரை இந்த வேலையை தக்கவைத்துக் கொண்டால் போதும் என்றிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு மறுபடியும் லாக்டவுன் போட்ட போது, இவருக்கு நிரந்தரமாக வேலை இல்லாமல் போய்விட்டது. வேறு வேலை தேடவும் முடியல. நான் அப்போது பெரிய டைல்ஸ் நிறுவனத்தில் ஷோரூம் நிர்வாகியா இருந்தேன். கைநிறைய சம்பளம். ஆனால் இவருக்கு வேலை இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துட்டேன்.   

இருவருக்கும் வேலை இல்லை என்றாகிவிட்டது. அதனால் ஏதாவது பிசினஸ் செய்யலாம்ன்னு முடிவு செய்தோம். அவருக்கு விளையாட்டு சார்ந்த பொருட்கள் கொண்ட கடையை துவங்கணும்ன்னு விருப்பம். அதற்கு போதுமான முதலீடு இல்லை. அதே சமயம் எனக்கு உணவு மேல் ஈடுபாடு அதிகம் என்பதால், தரமான உணவு கொடுத்தால் கண்டிப்பாக நம்மால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படித்தான் இந்த ஃபுட் டிரக் ஆரம்பிச்சோம்’’ என்றவர் இட்லி உணவை பிரதானமாக கொடுத்து வருகிறார்.

‘‘எங்க ஏரியாவில் சைவ உணவகம் பெரிய அளவில் இல்லை. நிறைய அசைவ ஓட்டல்கள் தான் இருக்கு. அதனால் சைவ உணவகம் ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்தோம். மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் மற்றும் இரவு நேரம் இட்லி, தோசை, சப்பாத்தின்னு டிபன் ஐட்டம் மட்டும் போட ஆரம்பிச்சோம். சாப்பாடு நன்றாக இருக்குன்னு சொல்லி வாடிக்கையாளர்கள் பலர் அசைவ உணவும் கேட்டாங்க. அதனால் முட்டை தோசை, சிக்கன் ரைஸ், சிக்கன் ஃபிரை எல்லாம் ஆரம்பிச்சோம். இட்லி, தோசை மட்டும்ன்னா நானும் என் கணவர் மட்டுமே செய்திடுவோம். ஆனால் மற்ற உணவுகள் என்றால் எங்களால் மட்டுமே தனியாக ஹாண்டில் செய்ய முடியாது என்பதால் அதற்காக தனியாக மாஸ்டர் வச்சிருந்தோம்.

ஆனால் அதுவே நிறைய பிரச்னைக்கு வழிவகுத்தது. அவங்க சரியா நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டாங்க. ஆரம்பத்தில் உணவில் இருந்த சுவை போக போக குறைய ஆரம்பிச்சது. எல்லாவற்றையும் விட அவங்க சமைக்கும் இடத்தை சுத்தமா வச்சுக்க தவறினாங்க. எனக்கும், என் கணவருக்கும் பிடிக்கல. இந்த பிரச்னையை நாங்க அசைவ உணவினை போட ஆரம்பிச்ச மூணே மாசத்தில் சந்திக்க ஆரம்பிச்சோம். எனக்கு சமைக்க தெரியும். ஆனால் ஒரு உணவகம் அமைக்கும் அளவுக்கு சமைப்பது சிரமம். அதுவும் இவ்வளவு வெரைட்டி கொடுப்பது ரொம்பவே கஷ்டம். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று யோசிக்க ஆரம்பிச்சேன்’’ என்றவர் தன்னுடைய உணவகத்தில் எல்லோருக்கும் பிடிச்ச உணவு என்ன என்பதை ஆய்வு செய்துள்ளார். ‘‘நானும் என் கணவரும் ஒவ்வொரு உணவு மற்றும் அதன் விற்பனை பற்றி ஆய்வு செய்தோம்.

அதில் சின்ன பசங்க என்றாலும், சிக்கன் ரைஸ், சிக்கன் ஃபிரை எல்லாம் இருந்தும், இட்லி இருக்கான்னு கேட்பாங்க. அப்பதான் எங்களுக்கு பொறி தட்டுச்சு. இவ்வளவு உணவு இருந்தாலும், இட்லி மட்டுமே விரும்புறாங்கன்னு கண்டறிந்தோம். இட்லி, தோசை, சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா மட்டும் போடலாம்ன்னு முடிவு செய்தோம். இது மட்டும் என்றால், எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மாஸ்டரின் அவசியம் இருக்காது. நானே பார்த்துக் கொள்வேன். எல்லாவற்றையும் விட அவர்களுக்கு சம்பளமும் கொடுத்தும் சில பிரச்னைகளை சந்தித்ததால், நாங்களே களத்தில் இறங்க முடிவு செய்தோம்.

வீட்லேயே இட்லி மாவு, சட்னி, சாம்பார், குருமா எல்லாம் தயார் செய்து கொண்டு வந்திடுவோம். இங்க வந்து கேட்பவர்களுக்கு சூடா இட்லி, தோசை, சப்பாத்தி போட்டு தருவோம். தோசையில் மட்டும் பொடி தோசை மற்றும் முட்டை தோசை கேட்பவர்களுக்கு தருகிறோம். இட்லியைப் பொறுத்தவரை மாவு பதமா இருந்தா தான் இட்லி பூப்போல மிருதுவா இருக்கும். உளுந்து நல்லா அரைபடணும். தண்ணீர் ஊற்றாமல் தெளிச்சு தெளிச்சு அரைக்கணும். ஒரு கிலோ அரிசிக்கு 250 கிராம் உளுந்து, இது தான் கணக்கு.

இட்லியை பொறுத்தவரை பெரிய செலவு எல்லாம் கிடையாது. எல்லாவற்றையும் விட கலப்படம் சேர்க்க வேண்டாம். ஆவியில் சமைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடக் கூடிய உணவு. இப்போது தினமும் 250 இட்லி விற்பனையாகிறது. இட்லிக்கு தினமும் காரச்சட்னி இருக்கும். தேங்காய் சட்னியில் ஒவ்வொரு நாளும் ஒரு வகை கொடுக்கிறோம். சப்பாதிக்கு ஸ்பெஷல் குருமா. சுவை வீட்டில் சாப்பிடுவது போல் தான் இருக்கும்.

ஹோட்டல் சுவை எல்லாம் இருக்காது. நாங்க எந்த சுவையூட்டிகளும் சேர்ப்பதில்லை. சாப்பிட வர்றவங்களும் வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்குன்னு விரும்பி சாப்பிட வராங்க. இந்த சுவையை எப்போதுமே கடைப்பிடிக்கணும் என்பது தான் என்னுடைய ஆசை’’ என்றவர் ஃபுட் டிரக் அமைத்ததற்கான காரணத்தை விவரித்தார்.‘‘எங்க ஏரியாவில் சிறிய அளவு கடையாக இருந்தாலுமே 20 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கிறாங்க. அது எங்களால் கொடுக்க முடியாது, என்பதால் தான் இந்த ஃபுட் டிரக்கை அமைச்சோம். ஒரு முழு டிரக் அமைக்க 12 லட்சம் கேட்டாங்க. அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. ஏஸ் டெம்போவை வாங்கி ஆறு லட்ச ரூபாயில் எங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்தோம்.

இதில்  இட்லி அவிக்க, தோசை சுட, சப்பாத்தி திரட்ட என எங்களின் வசதிக்கு ஏற்ப அமைச்சிருக்கோம். எல்லாவற்றையும் விட இது டிரக் என்பதால் நாம் விரும்பும் இடத்திற்கு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றுவிடலாம். இரவு நேரம் டிபன் உணவுகள் மட்டுமில்லாமல் அலுவலகங்களுக்கும் ஆர்டரின் பேரில் மதிய உணவு சப்ளை செய்கிறோம்.  மேலும் ஒரு பெரிய அளவில் கடை ஒன்றை அமைத்து காலை, மாலை இரண்டு வேளை இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அது சூடு பிடிக்க குறைந்தபட்சம் மூணு மாசமாகும். அதே சமயம் வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவது  அவசியம். நாங்க மாஸ்டரின் உதவிகள் இல்லாமல் சுமார் 30 நாட்களுக்கு முன்பு தான் ஆம்பிச்சோம். என்னைக் கேட்டா வீட்டில் இருக்கும் பெண்கள் தனக்கான சம்பாத்தியம் வேண்டும் என்று நினைக்கும் போது இது போல் இட்லி உணவினை வியாபாரமாக கூட செய்யலாம்’’ என்றார் ஆஷா.

செய்தி: ப்ரியா

படங்கள்: அருண்

Related Stories: