டெல்லியை அதிர வைத்த ரபியா சைஃபி கொலை

நன்றி குங்குமம் தோழி

#Justice For Rabiya

டெல்லியில் சிவில் டிபென்ஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரபியா சைஃபி. இவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு, உடலில் ஐம்பது இடங்களில் கத்திக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியினை படிக்கவே பயங்கரமாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

21 வயது ரபியா சைஃபி டெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பணிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மகளைக் காணாமல் பல இடங்களில் தேடி அவர் கிடைக்காத நிலையில் போலீஸில் புகார் அளித்தனர். இந்நிலையில் காணாமல் போன ரபியா சைஃபி சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே ரபியா சைஃபி  கொலை தொடர்பாக நிஜாமுதீன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார். ரபியாவும் தானும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் நடத்தையில் சந்தேகமடைந்து கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ரபியாவை, சுராஜ்குந்த் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிஜாமுதீன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் ஆத்திரத்தில் அவரைக் குத்திக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ரபியாவின் பெற்றோர் இதை மறுத்துள்ளனர். நிஜாமுதீன், ரபியாவின் நண்பர் மட்டுமே, இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு, டெல்லி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைத் தளங்களில் #JusticeForRabiya என ஹேஷ்டேக்கிலும் மக்கள் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.இந்நிலையில் ‘பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும்’ எனத் தன் கருத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘ரபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. இவர் டெல்லி லாஜ்பத்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றினார். அங்கு நடக்கும் ஊழலை அவர் வெளிக்கொண்டு வராமல் தடுக்க இப்படி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கொடூரமான குற்றவாளிகள் உடனடியாக விரைவு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட வேண்டும்’ எனவும் பதிவிட்டுள்ளார்.தலைநகரில் பணியாற்றிய பெண் சிவில் டிபென்ஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வழக்கைத் தீவிரமாக விசாரிக்கவும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரிக்கைகள் நாடு முழுதும் வலுக்கின்றன.

மன உளைச்சலுடன் நீதி வேண்டி குடும்பத்தினர்...

ரபியாவின் தாய், தந்தை, சகோதரனின் வலி நிறைந்த ஸ்டேட்மெண்டுகள் நெஞ்சை பிளக்கும் வேதனையை தருகிறது. சிவில் டிபென்ஸ் ஆபீசரான தனது மகளை காணவில்லை என ஆகஸ்ட் 26-ம் தேதி ரபியாவின் தந்தை சமித் அகமது மற்றும் அவரது குடும்பத்தினரால் டில்லி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் ரபியா குடும்பத்தினரை உட்காரக் கூடச் சொல்லாமல் வழக்கை முன்னதாகவே பதிவு செய்து விட்டோம். எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்து விட்டோம் என்று கூறி அவர்களது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர் காவல்துறையினர்.

ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின்னர் ‘புதருக்குள் கொலையுண்டு கிடக்கும் உங்கள் மகளின் உடலை வாங்கிச் செல்லுங்கள்’ என்று காவல்துறை ரபியாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்தப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வில்லை என அறிக்கை தந்துள்ளனர். ஆனால் இறுதிச் சடங்கின் போது, ரபியா கொடூரமான முறையில் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். ஒரு மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு வேதனையை ரபியாவின் உடல் மீது திணித்துள்ளது அந்த வன்முறை கும்பல்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: