×

இரண்டாவது கணவரின் சொத்தில் முதல் கணவரின் மகனுக்கு பங்கு உண்டா?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி?

அன்புள்ள தோழிக்கு,நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனக்கு 2 ஆண் பிள்ளைகள். பெரியவன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் பயிற்சி காலத்தில் இருக்கிறான். சிறியவன் கல்லூரியில் படிக்கிறான். எனது கணவரும் தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். வீட்டிலும் அவர் பொறுப்பானவர். ஆம். குடும்பத்தை கவனிப்பதில், பிள்ளைகளின் வளர்ச்சியில் அவருக்குதான் முக்கிய பங்கு. நாங்கள் இருவரும் வேலை செய்வதால் வசதி, வாய்ப்புகளுக்கு பிரச்னையில்லை. அறிவார்ந்த, பாசமான பிள்ளைகள். நிம்மதியான வாழ்க்கை. போதாததற்கு ஊரில் அவருக்கு அப்பா வழி சொத்துகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பிரிப்பதற்கான வேலை நடந்து வருகின்றன. அதில்தான் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

என் கணவருக்கு வரும் பங்கை அவர் பெயரில் எழுதுவதற்கு பதில், பிள்ளைகள் பெயரிலேயே எழுதிவிடலாம் என்று நான் ஆலோசனை சொன்னேன். பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டதால், ‘அதுதான் சரி ’ என்று என் கணவரும் அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவரது அண்ணன்கள், தம்பி ஆகியோர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களோ, ‘வேண்டுமானால் உன் பெயரில் எழுதிக் கொள், இல்லாவிட்டால், 2வது பையன் பெயரில் எழுதிக் கொள்’ என்று சொல்கின்றனர். காரணம் 2வது பையன்தான் என் கணவர் மூலம் பிறந்தவன். முதல் பையன், என் முதல் கணவருக்கு பிறந்தவன்.

அதாவது இவர் எனது 2வது கணவர். என் முதல் கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அப்போது எனக்கு 24 வயது, முதல் பையனுக்கு ஒரு வயது. அதனால் எனக்கு 2வது திருமணம் செய்ய வேண்டும் என்பதில் எங்கள் வீட்டில் உறுதியாக இருந்தனர். ஆனால் எனக்குதான் தயக்கமாக இருந்தது. காரணம், வருபவர் என் குழந்தையிடம் அன்பாக இருப்பாரா, நன்றாக பார்த்துக் கொள்வாரா என்ற பயம்தான்.அதற்கு ஏற்ப வந்த வரன்கள் எல்லாம், குழந்தை இருப்பதால் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினர். சிலர் வெளிப்படையாக சொன்னார்கள். பலர் திரும்ப வரவேயில்லை. இப்படியே 2 ஆண்டுகள் போயின. எனக்கும் யாரும் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் கூட இருந்தது. கூடவே அவர்கள் ‘வேண்டாம்’ என்று சொல்லும்போது எல்லாம் எனக்கு ‘அப்பாடா’ என்றிருக்கும்.

ஆனால் அப்பா, அம்மாவும், ‘நாங்கள் இருக்கும் வரை உனக்கு கஷ்டம் தெரியாது.... நாங்கள் இல்லாவிட்டால் உனக்கு ஆதரவு இருக்காது. அப்போது உனக்குதான் கஷ்டம். அதனால்தான் உனக்கு 2வது கல்யாணம் செய்வதில் தீவிரமாக இருக்கிறோம். தயவு செய்து புரிந்து கொள்’ என்றனர். ‘குழந்தையை நாங்கள் வளர்த்துக் கொள்கிறோம். அதனால் இனி வரன் வந்தால் அதை முதலில் சொல்லி விடலாம்’ என்றும் சொன்னார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை... ‘2வது திருமணத்திற்கு நீங்கள் சொன்னதால் ஒப்புக் கொள்கிறேன்.... ஆனால் என்னை குழந்தையுடன் யார் ஏற்றுக் கொள்கிறாரோ அவரைதான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று உறுதியாக சொல்லி விட்டேன். என் பெற்றோர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அந்த முடிவில் உறுதியாக இருந்தேன்.

கூடவே, ‘இதற்கு மேல் யார் பெண் பார்க்க வரப்போகிறார்கள். வந்தாலும் குழந்தை இருப்பதை தெரிந்ததும் ஓட்டம் பிடிக்கப்போகிறார்கள்’ என்று நினைத்தேன். அப்போதுதான் எனது 2வது கணவரான இவரும் பெண் பார்க்க வந்தார். இவருக்கும் எனக்கும் 8 வயது வித்தியாசம். இவருக்கு செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டு இருந்து. அதனால் 2வது திருமணம் செய்து வைக்க அவரது அப்பா, அம்மா தயாராக இருந்தார்கள். ஆனால் முதல் பிள்ளையை அம்மா வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவில்லை. ‘அதை விட திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து  விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு இவர், குழுந்தையையும் உடன் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். செவ்வாய் தோஷ மாப்பிள்ளைக்கு திருமணம் ஆனால் போதும் என்று இவரது வீட்டிலும் அரை மனதுடன் சம்மதித்தனர். என் கணவர் முழு மனதுடன் என் குழந்தையை ஏற்றுக் கொண்டார். எங்களுக்கு குழந்தை பிறந்த பிறகும் கூட அவர் முதல் குழந்தையிடம் பாசத்தை குறைத்துக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் என்னை விட, அவரிடத்தில் தான் பெரிய பையன் அதிக பாசத்துடன் இருக்கிறான். அவரிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டான்.

அதுமட்டுமல்ல பெரிய பையனின் சான்றிதழ்களில் அப்பா என்ற இடத்தில் முதல் கணவரின் பெயர்தான் இருக்கிறது. ஏனென்றால் பிறப்பு சான்றிதழிலும் அப்படித்தான் இருக்கிறது. அதற்கு இவர் மறுப்பேதும் சொல்லவில்லை. மாற்றவும் கட்டாயப் படுத்தவில்லை யாராவது அப்பா பெயர் கேட்டால் இரண்டு (கணவர்களின்) பெயர்களை சேர்த்து சொல்வான். அதைப் பார்த்து சின்னப் பையனும் அதே மாதிரிதான் அப்பா பெயரை குறிப்பிடுவான்.

அதனை என் கணவர் கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அவரது அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி ஆகியோர் எரிச்சலடைவார்கள். இத்தனைக்கும் பெரிய பையன் அவர்களைதான் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று அழைப்பான். அவர்களோ அதை கண்டு கொள்ள மாட்டார்கள். பெரிதாக பாசம் காட்டவும் மாட்டார்கள். அதனால் குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அதிகமாக அழைத்துச் செல்வதில்லை.

கூடவே என் கணவர் அன்பாக இருப்பதால் அவரது குடும்பத்தினரின் அலட்சியத்தை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில்தான் சொத்து பிரச்னை வந்துள்ளது. என் கணவருக்கு எப்படி 2 பிள்ளைகள் மீது சொத்தை பிரித்து எழுத வேண்டும் என்று சொன்னேனே, அதே மாதிரிதான் என் அம்மா வீட்டில் எனக்கு கிடைக்க உள்ள சொத்தையும் இரண்டு பிள்ளைகளின் பெயரில் பிரித்து எழுத சொன்னேன். ஆனால் என் கணவர் வீட்டில் பிரச்னை செய்கிறார்கள்.

எனது 2வது கணவர் வளர்த்தாலும், முதல் பையன் அவரது பையனாகத்தான் வளருகிறான். சொந்த பிள்ளை என்று இல்லாவிட்டாலும், வளர்ப்பு பிள்ளை கணக்கு வரும் தானே. வீட்டு ரேஷன் கார்டு, பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ்களில் அப்பா/ பாதுகாவலர் என்ற இடத்தில் என் 2வது கணவர் பெயர்தான் இருக்கிறது. அதனால் பெரிய பையனும் இவருக்கு சட்டப்படி வாரிசுதானே? அவனுக்கும் பரம்பரை சொத்தில் பங்கு தர வேண்டும்தானே? அதில் ஏதாவது சட்டச்சிக்கல் இருக்கிறதா? அதுமட்டுமின்றி ஒரு பிள்ளைக்கு சொத்து... இன்னொரு பிள்ளைக்கு சொத்து இல்லை என்பது இருவருக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு, பிரிவினை ஏற்படும், மனஸ்தாபம் ஏற்படும் என்றுதான் பயப்படுகிறேன்.

போதாததற்கு முதல் கணவருக்கும் வீடு, நிலம் எனத பரம்பரை சொத்து கொஞ்சம் இருக்கிறது. அதனை அவரின் தங்கை வைத்துக் கொண்டு பங்கு தர மறுக்கிறார். என்னையும், என் மகனையும், ‘அவரது பெயருக்கு சொத்தை மாற்ற, கையெழுத்து போட்டுக் கொடுங்கள்’ என்று சொல்கிறார். ஆனால் முதல் கணவரின் வயதான மாமனார், மாமியாரோ எப்படியாவது என் முதல் மகனுக்கும் பங்கு தர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் மகளின் ஆதரவில் வாழ்வதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இன்னொரு குடும்பத்தில் வாழ்வதால் என்னால் உரிமையாக போய் கேட்க தயக்கமாக இருக்கிறது. என் கணவரிடம் சொன்னால், அவரோ அதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி இரண்டு பக்கமும் என் முதல் பிள்ளைக்கு சொத்து இல்லாமல் போவது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.எனது சந்தேகங்கள் என்னவென்றால், 2வது கணவரின் பரம்பரை சொத்தில் என் பெரிய பையனுக்கு சட்டரீதியான உரிமை இருக்கிறதா?

ஒருவேளை என் 2வது கணவரின் பெயருக்கு பரம்பரை சொத்து மாற்றப்பட்டால், அவற்றில் என் பெரிய மகனுக்கு பங்கு உண்டா? அதேபோல் எனது 2வது கணவர் சுயமாக சம்பாதிக்கும் சொத்தில் என் பெரிய பையன் உரிமை கொண்டாட முடியுமா? கூடவே என் முதல் கணவரின் சொத்தில் என் பெரிய பையனுக்கு சட்டரீதியான உரிமை உள்ளதா? என் பெரிய மகனுக்கு வாரிசாக என்னென்ன சட்ட உரிமைகள் உள்ளன? அந்த உரிமைகளை நிலை நாட்ட என்ன செய்ய வேண்டும்? நீதிமன்றம் செல்லாமல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தீர்வு காண முடியுமா?

வழி தெரியாமல், கடந்த 4 மாதங்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மீண்டும் சொல்கிறேன். என் 2 மகன்களுக்கும் சமமாக சொத்து கிடைக்க வேண்டும் என்பதை விட, இரண்டு பேருக்கும் இடையில் எந்த ஏற்றத்தாழ்வும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் தங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். என் சந்தேகங்களை தீர்த்து எனக்கு நல்ல வழியை காட்டுங்கள் தோழி.

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

ஒரு தாய்க்கு உள்ள இயல்பான குணத்தை உங்கள் கடிதம் வெளிப்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளையும் சமமாக பாவிக்கும், இருவருக்கும் சமமான எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் உங்களை பாராட்டுகிறேன். ஆனால் உங்கள் பிரச்னையை பொறுத்தவரை நீங்கள் பதட்டப்பட ஏதுமில்லை. அதனை இயல்பாக அணுகினால் போதும் எளிதில் தீர்வு காணலாம். உங்கள் 2வது கணவரின் பரம்பரை சொத்தில் உங்கள் முதல் மகனுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது. ஏனென்றால் அவன் உங்கள் 2வது கணவருக்கு பிறக்கவில்லை. அவர் உங்கள் முதல் மகனை சட்டரீதியாக தத்தும் எடுக்கவில்லை.

அதனால் பரம்பரை சொத்தில் 2வது கணவருக்கும், அவருக்கு பிறந்த 2வது மகனுக்கு மட்டுமே உரிமை உண்டு. அதனால் உங்கள் மாமியார் வீட்டில், உங்கள் கணவர், 2வது மகன்  பெயரில் மட்டுமே எழுதி தர முடியும் என்று சொல்வதை நீங்கள் சட்டரீதியாக எதிர்க்க முடியாது. உங்கள் 2வது கணவர் பெயரில் சொத்தை எழுதி வாங்கிக் கொள்ளலாம். அதன் பிறகு அவர் மூலம் 2 பிள்ளைகளுக்கும் சொத்தை சமமாக பங்கு பிரித்து தரவேண்டும் என்று உயில் எழுதி வைக்கலாம். அதில் எந்த சட்டப் பிரச்னையும் இருக்காது. ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு சொத்துகளை பிரித்து தருவது போல் இயல்பாக இருக்கும்.

உங்கள் 2வது கணவர் நல்ல குணம் உடையவர், உங்கள் முதல் மகனிடம் அதிகமாக அன்பு செலுத்துகிறார் என்பதை உங்கள் கடிதத்தில் இருந்து தெரிகிறது. அதுமட்டுமின்றி முதல் மகனுக்கு பங்கு தர வேண்டும் என்பதில் 2வது கணவரும் உறுதியாக இருக்கிறார். உங்கள் 2வது கணவர் பெயரில் சொத்துகளை எழுதி வாங்கிக் கொள்வதின் மூலம் நீங்கள் நினைப்பது எளிதில் நிறைவேறும். கூடவே 2வது மகன் மீது பிரித்து எழுதுவதை விட மொத்தமாக உங்கள் 2வது கணவர் பெயருக்கே சொத்துகளை மாற்றுவது சரியாக இருக்கும்.

உங்கள் கணவர் சம்பாதிக்கும் சொத்துகளை, அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். அதை அவருக்கு பிறந்த உங்கள் 2வது மகன் கூட,  தனக்குதான் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் முதலில் சொன்னது போல், அவரது நல்ல குணத்தின் காரணமாக அவர் சம்பாதித்திருக்கும் சொத்துகளை கட்டாயம் 2 பிள்ளைகளுக்கும்தான் தருவார் என்று தோன்றுகிறது. அதனால் அந்த பிரச்னையும் உங்களுக்கு எழ வாய்ப்பில்லை.

கடைசியாக உங்கள் முதல் கணவரின் பரம்பரரை சொத்துகள். அதில் முதல் மகனுக்கு பங்கு கிடைக்குமா? உரிமை இருக்கிறதா என்று கேட்டுள்ளீர்கள். கட்டாயம் உரிமை உள்ளது. நிச்சயம் பங்கு கிடைக்கும். இறந்து போன உங்கள் முதல் கணவரின் பங்குக்கு நீங்களும், உங்கள் முதல் மகனும் சட்டப்படியான வாரிசுகள். அதனால் உங்களுக்கு பங்கு தர முடியாது என்று அவர்களால் சொல்ல முடியாது.

சட்டப்படி நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பங்கை பிரித்து வாங்கலாம். உங்கள் முதல் மகன் மேஜர் என்றால் அவரோ கூட வழக்கு தொடுக்கலாம். அதற்கு முன்பு உறவில் உள்ள பெரியவர்களை வைத்து பேசி சுமுகமாக சொத்தை பிரிக்க முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் வழக்கறிஞர் மூலம் சொத்தில் பங்கு கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம். அப்படியும் முடியாவிட்டால் வழக்கறிஞர் ஆலோசனையை பெற்று வழக்கு தொடரலாம். ஆக எல்லாவற்றையும் பொறுமையுடன் கையாளுங்கள், சட்டப்படி தீர்வு காணுங்கள்.... எல்லாம் நல்லதாகவே நடக்கும். வாழ்த்துகள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

Tags :
× RELATED தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!