குடும்ப தகராறில் வங்கி அதிகாரி தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் இளவரசன் (38), சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தா சீலா (35). இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவர்களுடன் இளவரசனின் அம்மா செல்லம் (60) வசித்து வருகிறார். இளவரசனின் மனைவி சாந்தா சீலா கிண்டியில் உள்ள தனியார் வங்கியின் பைனான்ஸ் பிரிவில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். சாந்தா சீலாவுக்கும், மாமியார் செல்லத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாமியாருக்கும், மருமகளுக்கும் வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், மனம் உடைந்த சாந்தா சீலா தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். பின்னர்,  நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த  செல்லம் அறையின் கதவை தட்டி பார்த்து உள்ளார். ஆனால், அப்போதும் அவர் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மின் விசிறியில் சாந்தா சீலா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்த போலீசார், சாந்தா சீலா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சாந்தா சீலாவின் மாமியார் செல்லத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார், மருமகள் சண்டையில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: