கல்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ: மின்சாரம் இல்லாமல் தவிப்பு

திருக்கழுக்குன்றம்:  கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால், கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று பிற்பகலில் தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கூவத்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் எரிந்து போனதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘டிரான்ஸ்பார் பல மாதங்களாக அடிக்கடி, லேசான வகையில் தீப்பிடித்து தீப்பொறிகள் கொட்டும். அப்போதெல்லாம், மின் வாரிய ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தால் அவர்கள் தாமதமாக வந்து மின் விநியோகத்தை நிறுத்தி மறுநாள் வந்து அதை சரி செய்து விட்டு மின் விநியோகம் வழங்குவார்கள். இது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், தற்போது டிரான்ஸ்பார்மர் முழுவதுமே எரிந்து விட்டது. மின்சாரம் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, அடிக்கடி தீப்பிடிக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா, சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கூறினர்.

Related Stories: