சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அமைக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் சுமார் 45 கி.மீ சாலையை ரூ.380 கோடி திட்ட மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 7 மீட்டர் அகலம் உள்ள இந்தச் சாலையில் போக்குவரத்து அதிகரித்ததை தொடர்ந்து 10 மீட்டர் அகலம் உள்ள சாலையாக மாற்றப்படுவதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் போடப்பட்டு அதன் மீது மண் கொட்டப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து வெள்ளைகேட் வரை சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த சாலை வழியாக அரக்கோணம் சென்று அங்கிருந்து திருப்பதி, திருத்தணி கோயில்களுக்கு செல்கின்றனர். மேலும் கூரம், ஈஞ்சம்பாக்கம், சேந்தமங்கலம், கோவிந்தவாடி அகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் இந்தச் சாலை வழியாக காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அடிக்கடி விபத்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரவு பணி முடித்து விட்டு அந்த வழியாக டூ வீலரில் சென்ற அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் வெங்கடேசன் என்பவர்  பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் இறந்ததாக கூறப்படுகிறது. எனவே, சாலை விரிவாக்க பணியில் சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் எடுக்கப்பட்ட பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: