காஞ்சிபுரம் காந்தி நகர் - பெருந்தேவி தாயார் நகர் இடையே ரூ.11 லட்சம் மதிப்பில் இணைப்பு பாலம்: எம்எல்ஏ, மேயர் பணியை தொடங்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு காந்தி நகர்- பெருந்தேவி தாயார் நகர் இடையே ரூ.11 லட்சம் மதிப்பில் இணைப்பு பாலம் கட்டும் பணியை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உத்திரமேரூர் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட 49வது வார்டு காந்தி நகர் - பெருந்தேவி தாயார் நகர் இடையே செல்லும் கால்வாயினால் மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் வெளியில் சென்று வருவதற்கு முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 2 நகர்களுக்கும் இடையே கால்வாய் மீது இணைப்பு பாலம் அமைத்து தர வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 49வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் பரிந்துரையின்பேரில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ரூ.11 லட்சம் செலவில் காந்திநகர் - பெருந்தேவி தாயார் நகர் இடையே கால்வாய் மீது இணைப்பு பாலம் கட்டும் பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. இதனைதொடர்ந்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெருந்தேவி நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இப்பகுதியில் சுமார் 8 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை மற்றும் பெரியவர்களுக்கு அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழ்நிலை நிலவியது.

கேஸ் சிலிண்டர் கொண்டு வந்தாலும், எங்கள் பகுதிக்கு எடுத்துக்கொண்டு வர முடியாது நாங்கள் தான் சென்று எடுத்துக்கொண்டு வருவோம். இதனால், பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தோம். தற்போது, இணைப்பு பாலம் கட்டப்படும் பணி துவங்கப்பட்டதால் பள்ளி, மருத்துவமனை, அவசர தேவை ஆகியவற்றிற்கு எளிதில் செல்ல முடியும். இதனை நிறைவேற்றி தந்த எம்எல்ஏ க.சுந்தர், மேயர் மகாலட்சுமி ஆகியோருக்கு, அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் நன்றியினை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள், சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், பகுதி திமுக செயலாளர் தசரதன், நிர்வாகி யுவராஜ், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: