படூர் இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற இஸ்ரோ கண்காட்சி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கியர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருப்போரூர்: படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இஸ்ரோ கண்காட்சியில், மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கியர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார். ஆண்டு தோறும் அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் சார்பில், படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில்  3 நாள் இஸ்ரோ கண்காட்சி  நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக இணை வேந்தர் ஆனந்த ஜேக்கப் வர்கீஸ் தலைமை தாங்கினார். இணை துணை வேந்தர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் வரவேற்றார். விண்வெளி வார கொண்டாட்டங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: இந்தியாவில் முதன்முதலாக ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்கு எத்தனை விஞ்ஞானிகள் உழைத்தனர், எவ்வளவு கஷ்டப்பட்டனர் என்பதை நாம் உணர்ந்து கொண்டால்தான் நாம் இன்றைய வெற்றிகளை கொண்டாட முடியும். ஒரு காலத்தில் இந்தியா விண்வெளி துறையில் மிகவும் பின்தங்கி பிற நாடுகள் நம்மை ஏளனமாக பார்க்கும் நிலை இருந்தது. நமது இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் உலக நாடுகள் நம்மை வியந்து பார்க்கும் வகையில் முன்னேறி இருக்கிறோம். தற்போது, விண்வெளி துறையில் நாம் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டோம். அதனால், நமது தமிழக முதல்வர் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஞ்ஞானி உருவாக வேண்டும். கண்டுபிடிப்பாளராக மாற்ற வேண்டும் என்று மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

டிரோன் தொழில் நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் டிரோன் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் இன்னும் மேம்பட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருக்கிற மாணவர்களில் ஒருவராவது இஸ்ரோவில் நாளை பணிபுரியும் வகையில் படித்து முன்னேறினால் அதுவே வெற்றி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலைய இணை இயக்குனர் வெங்கட்ராமன், சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலைய பாதுகாப்பு பிரிவு தலைவர் சுப்பானந்தன், இந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீதரா, இயக்குனர்கள் அசோக் வர்கீஸ், அபி சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: