வரத்து அதிகரிப்பு, பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை கடும் சரிவு

விருகம்பாக்கம்: வரத்து அதிகரிப்பு மற்றும் பண்டிகைகள் முடிந்ததையொட்டி, கோயம்பேட்டில் பூக்களின் விலை சரிந்தது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னை நகரில் கடந்த சில நாட்களாக நவராத்திரி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிலோ மல்லி ரூ.1200க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதிமல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.800க்கும், அரளி ரூ.300க்கும், வெள்ளை அரளி ரூ.500க்கும், சம்பங்கி ரூ.220க்கும் பன்னீர் ரோஜா ரூ.200க்கும் என விற்கப்பட்டன. எனினும், தொடர் பண்டிகை காரணமாக வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து இல்லத்தரசிகள் பூக்களை வாங்கி சென்றனர்.

இந்நிலையில், பண்டிகைகள் முடிந்ததாலும், நேற்று காலை வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்ததாலும் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்தது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.750, முல்லை ரூ.450, ஜாதிமல்லி ரூ.300, கனகாம்பரம் ரூ.600, சாமந்தி ரூ.250, சம்பங்கி ரூ.120, பன்னீர் ரோஜா ரூ.80 என விலை குறைந்து காணப்பட்டன. இதனால் இல்லத்தரசிகள் அதிகளவில் ஏராளமான பூக்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். பூக்களின் விலை குறைவால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

Related Stories: