சிறுமி மீது மின்கம்பம் விழுந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை வேண்டும்: தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் உத்தரவு

சென்னை: விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது மின்கம்பம் விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்பகிர்மான கழக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான இயக்குநர் அலுவலகத்தில் இருந்து சென்னை தெற்கு  மண்டல  தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மதுராந்தகம் அடுத்த அவுரிமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் கிருத்திகா (12),  கடந்த 5ம் தேதி தனது வீட்டிற்கு எதிரே விளையாடிக்கொண்டிருந்த போது, தெருவோரத்தில் இருந்த  மின்கம்பம் உடைந்து கிருத்திகா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, அவரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.  இந்த விபத்து குறித்து ஆய்வு நடத்தியதில்,  மின்வாரியத்தை சேராத ஒருவர், அந்த  பழுதடைந்த மின்கம்பத்தில் ஏறி தெருவிளக்கை மாற்ற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் மின்கம்பத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதனால் மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், அப்பகுதிக்கு உட்பட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் வயர்மேன், மின்கம்பம் பழுதடைந்த விவரங்களை மின்சாரத்துறையின் உயர்அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மின்சாரத் துறை சார்பில், நடத்தப்படும் ஒவ்வொரு ஆய்வு கூட்டத்திலும் சிறப்பு பராமரிப்பு பணிகள் மற்றும் விமர்சன ரீதியாக வரும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்றுவது குறித்து அதிகாரிகள் மற்றும் வயர்மேன்கள் உயர் அதிகாரிகளிடம் கூறாமல் இருந்துள்ளனர். பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றியிருந்தால் இதுபோன்ற ஒரு விபத்தை தவிர்த்து இருக்கலாம்.

கடந்த சில மாதங்களாக மின்கம்பங்களின் சிறப்பு பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வயர்மேன்கள் என்ன செய்கின்றனர் என்பதை உதவி பொறியாளர்கள் கண்டுக்கொள்வதில்லை. சிறுமியின் விபத்து என்பது பிரிவு அதிகாரி மற்றும் வயர்மேன் ஆகியோரின் மெத்தன போக்கை காண்பிக்கிறது. எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து மின்கம்பங்களும் சரிப்பார்ப்பு மற்றும் பழுந்தடைந்த மின்கம்பங்களை மாற்றுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: