பூந்தமல்லி அருகே லாரியில் அதிக எண்ணிக்கையில் ஏற்றிசென்ற 35 மாடுகள் மீட்பு: லாரி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

பூந்தமல்லி: லாரியில் அதிக எண்ணிக்கையில் ஏற்றி சென்ற 35 மாடுகளை மீட்ட போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து, லாரி உரிமையாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர். சென்னை வண்டலூர்  மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் தலைமையில், வருவாய்துறையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஆந்திர மாநிலத்தில் இருந்து அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை மடக்கி, பிடித்து சோதனை செய்தனர். அதில்,  உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி 35 எருமை மாடுகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து,வருவாய்துறையினர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார் லாரியையும், மாடுகளையும் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு 35 எருமை மாடுகளை ஒரே லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏற்றி சென்றதும், பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக அடி மாடாக இந்த மாடுகளை  அனுப்புவதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஒரு லாரியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாடுகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். அதை மீறி ஒரே லாரியில் அதிக எண்ணிக்கையில் 35 மாடுகளை ஏற்றி வந்துள்ளனர். இதையடுத்து, எருமை மாடுகளை ஏற்றி வந்த லாரியின் உரிமையாளரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இதயத்துல்லா(38), லாரி டிரைவர் சையது ரியாஸ்(42) ஆகிய இருவரையும் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும், மீட்கப்பட்ட மாடுகளையும், ஊத்துக்கோட்டை அரசு கால்நடை மையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: