சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென பிரேக் போட்டதால் அடுத்து வந்த வாகனங்கள் மோதி விபத்து

திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்ற தனியார் பஸ் திடீரென பிரேக் போட்டதில் அடுத்தது வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செல்போன் கம்பெனி பஸ் ஒன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா, அருங்குளம் பகுதியில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில், எட்டு ஊழியர்கள் இருந்தனர். தனியார் பஸ்சை ஓட்டுனர் கோவிந்தராஜூ ஒட்டி வந்தார். இந்நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச்சாலை அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே திடீரென ஒரு தண்ணீர் டிராக்டர் சாலை கடந்து சென்றது. தனியார் பஸ் ஓட்டுனர் கோவிந்தராஜூ டிராக்டர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். இதனால், பஸ்சின் பின்னால் வந்த கார் மற்றும் அதன் பின்னால் வந்த அரசு பஸ்  என மூன்று வாகனங்களும் ஒன்றின் பின் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.

இதில், கார் இரு பஸ்கள் இடையே சிக்கிக் கொண்டு அப்பளம் போல் நொறுக்கியது. காரில், பயணம் செய்த, ஐந்து பேர் சிறு காயமின்றி உயிர்தப்பினர். அதே போல் அரசு பஸ்சில் பயணம் செய்த, 42 பேரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். மொத்தத்தில் மூன்று வாகனங்களிலும் இருந்த  55 பேரும் சிறுகாயங்களின்றி உயிர்தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நெடுஞ்சாலையின் குறுக்கே விபத்துகளில் சிக்கிய மூன்று வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், அரசு பஸ் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பஸ்சை ஓட்டுனர் ரவிக்குமார் ஒட்டி வந்ததும், காரை ஆந்திர மாநிலம் மேல்திருப்பதி சேர்ந்த பிரசாத் (35) என்பவர் தனது தந்தையை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு காரில் திருப்பதி நோக்கி சென்றதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: