கத்தார் உலக கோப்பையே கடைசி...

கத்தாரில் நடைபெற உள்ள பிபா உலக கோப்பை போட்டியே தான் விளையாடும் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என்று அர்ஜென்டினா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (35 வயது) தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக போற்றப்படும் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக இதுவரை 4 உலக கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார். மொத்தம் 19 உலக கோப்பை ஆட்டங்களில் அவர் 6 கோல் அடித்துள்ளதுடன் சக வீரர்கள் கோல் அடிக்க 5 முறை உதவியுள்ளார். 2014 உலக கோப்பையில் 2வது இடம், 2021 கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதே அர்ஜென்டினா அணிக்காக அவரது சாதனையாக உள்ளது.

5வது முறையாக உலக கோப்பையில் களமிறங்க உள்ள மெஸ்ஸி, கத்தாரில் (நவ. 20 - டிச. 18) தேசிய அணிக்காக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைப்பாரா என்பதே அர்ஜென்டினா ரசிகர்களின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பாகும். அடுத்த உலக கோப்பை தொடரின்போது தனக்கு 39 வயதாகிவிடும் என்பதாலேயே, கத்தார் உலக கோப்பையே தான் விளையாடும் கடைசி உலக கோப்பை தொடர் என்பதை அவர் உறுதியுடன் அறிவித்துள்ளார். 2005ல் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக இதுவரை 164 போட்டிகளில் விளையாடி 90 கோல் அடித்துள்ளார்.

Related Stories: