மகளிர் ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தானிடம் போராடி தோற்றது இந்தியா

சில்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் குவித்தது. முனீபா 17, சிட்ரா அமீன் 11, கேப்டன் பிஸ்மா 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த நிடா தார் 56* ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3, வஸ்த்ராகர் 2, ரேணுகா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 124 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 26 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஹேமலதா 20, மந்தனா 17, தீப்தி 16, மேகனா 15, கேப்டன் ஹர்மன்பிரீத் 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 3, நிடா தார், சதியா இக்பால் தலா 2, அய்மன், டுபா ஹசன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். நிடா தார் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். நேற்று முன்தினம் தாய்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான், நேற்று பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: