வாகன சோதனை நடத்தி லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆர்ஐயின் கணவர் கைது

போச்சம்பள்ளி: வாகன தணிக்கையின்போது, லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆர்ஐயின் கணவரை கிராமமக்கள் சுற்றிவளைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது ெசய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை சேர்ந்த மாதையன் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு, புளியம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. முல்லை நகர் அருகே, போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபாவின் கணவர் கோவிந்தராஜ் (53) லாரியை நிறுத்தினார். தன்னை ஆர்ஐ என கூறிய அவர், லாரியில் இருந்தவர்களிடம் பணம் கேட்டுள்ளார். தேவையான ஆவணங்கள் அனைத்தையும் லாரி டிரைவர் காட்டியும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதனை பார்த்த கிராம மக்கள் அவரை சுற்றிவளைத்தனர். தகவலின்படி போச்சம்பள்ளி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபாவின் கணவர் எனவும், ஜெயபிரபா அலுவலகத்தில் வேலையாக உள்ளதால், தன்னை வாகன சோதனைக்கு அனுப்பியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் கோவிந்தராஜ் வந்த டூவீலரில் போலியாக பிரஸ் என்ற ஸ்டிக்கரும் ஒட்டியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: