ரூ.5,551 கோடி முடக்கம் பாக். போகவில்லை: ஷாவ்மி நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள தனது  தொழிற்சாலையை பாகிஸ்தானுக்கு மாற்ற உள்ளதாக வெளியான தகவலை சீனா செல்போன் நிறுவனமான ஷாவ்மி மறுத்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான ஷாவ்மி, கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவில் தனது செல்போன், டிவி தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டே, வெளிநாடுகளை சேர்ந்த 3 போலி நிறுவனங்களின் மூலமாக தனது லாப தொகையை சீனாவுக்கு சட்ட விரோதமாக அனுப்பியது. இதன் மூலம்,  பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது. இதை கண்டுபிடித்த அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரலில் இந்த நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தியது.  

இதன் அடிப்படையில்,  இந்த நிறுவனத்தின் ரூ.5,551 கோடி வங்கி பணத்தையும், சொத்துகளையும் சமீபத்தில் முடக்கியது. ‘இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஷாவ்மி நிறுவனம், தனது தொழிற்சாலையை பாகிஸ்தானுக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது,’ என்று தகவல் பரவி வருகிறது. இதை ஷாவ்மி இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர்  நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் தொழில் தொடங்கிய ஓராண்டுக்குள், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உட்பட்டு, எங்களின் 99 சதவீத ஸ்மார்ட் போன்களையும், 100 சதவீத ஸ்மார்ட் டிவி.க்களையும் இங்குதான் தயாரித்து வருகிறோம்.

இந்தியாவில் உள்ள எங்கள் நிறுவனத்தை பாகிஸ்தானுக்கு மாற்றும் திட்டமும் இல்லை,’ என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் வழக்கு: தனது நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணம், சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஷாவ்மி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிபதி சஞ்சய் கவுடா அமர்வு, அமலாக்கத் துறை, அன்னிய செலவாணி மேலாண்மை அமைப்பு, ஒன்றிய நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: