எருமைகளை தொடர்ந்து பசு வந்தே பாரத் மீண்டும் சேதம்

புதுடெல்லி:  குஜராத்தில் எருமைகள் மீது மோதியதால் சேதமடைந்த வந்தே பாரத், நேற்று சரி செய்யப்பட்ட நிலையில் பசு மாடு மீது மோதி லேசான சேதமடைந்தது. குஜராத்தில் நேற்று முன்தினம் காலை வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எருமைகள் தண்டவாளத்தில் கூட்டமாக புகுந்தன. இதனால், அவற்றின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்தது. வந்தே பாரத் ரயிலின் முகப்பு பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே, முகப்பு மட்டும் சேதமானது. உட்புற இன்ஜின் பாகங்கள் எதுவும் சேதமாகவில்லை. சேதமடைந்த முகப்பு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மாற்றப்பட்டு புத்தம் புதிதாக மீண்டும் புதுப்பொலிவு பெற்றது.

இதனால், பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நேற்றே ரயில் வழக்கம் மீண்டும் இயக்கப்பட்டது. இந்நிலையில், தண்டவாளத்தில் வந்து விபத்து ஏற்படுத்திய எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும், இதுவரை அவர்கள் யார் என்பது கண்டறியப்படவில்லை. இந்நிலையில், குஜராத்தின் ஆனந்த் நகர் ரயில் நிலையம் அருகே நேற்று பிற்பகல் வந்தே பாரத் ரயில் வந்தபோது பசு மாடு குறுக்கே வந்துள்ளது. பசு மீது மோதியதால் வந்தே பாரத் மீண்டும் லேசாக சேதமடைந்தது. யாருக்கு அபசகுனம்?

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் வந்தே பாரத் ரயிலும் ஒன்று. இது தனது சோதனை ஓட்டத்தில் 180 கிமீ வேகத்தை தொட்டதால் அவர் பூரித்தார். ரயிலை தொடங்கி வைத்து பெருமிதத்துடன் அதில் பயணமும் செய்தார். இந்நிலையில், குஜராத்தில் இந்த ரயில் அடுத்தடுத்த நாளில் எருமைகள், பசுக்கள் மீது மோதுவதை ஜோதிடர்கள் அபசகுனமாக பார்க்கிறார்கள். இந்த மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், பாஜ.வுக்கு சறுக்்கல் ஏற்படுவதற்கான கெட்ட சகுனமாகவும் இது கருதப்படுகிறது.

Related Stories: