வியாபாரியுடன் ‘பேஸ்புக்’கில் பழகி 4வது திருமணம் செய்த இளம்பெண்; தாய் மாமனாக நடித்த 2வது கணவருடன் பிடிபட்டார்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கல்யாண ராணி சிக்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விநாயகபுரம் அம்மன்நகரை சேர்ந்தவர் தீபன் (23). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் பேஸ்புக் மூலம் பழக்கமான கவுசல்யா (எ) சரண்யா என்ற இளம்பெண்ணை கடந்த ஜூன் 25ம் தேதி ஆத்தூரில் சரண்யாவை தீபன் திருமணம் செய்துள்ளார். சரண்யா தரப்பில் தாய்மாமன் என்று கூறி நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தை சேர்ந்த ரகுவரன் (32) வந்துள்ளார். ஒரு மாதம் எவ்வித பிரச்னையும் இன்றி ஒன்றாக வாழ்ந்தநிலையில், அதன்பின் சரண்யா அடிக்கடி வெளியே சென்று வரவே, தீபன் விசாரித்ததில் வேறு நபர்களுடன் அவருக்கு பழக்கம் இருப்பதை அறிந்து, கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 30 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை சுருட்டிக் கொண்டு சரண்யா ஓட்டம் பிடித்தார். இதுபற்றி ஆத்தூர் டவுன் போலீசில் தீபன் புகார் கொடுத்தார். இந்நிலையில், நாமக்கல் நடராஜபுரத்தில் ரகுவரனின் வீட்டில் இருந்த சரண்யாவை நேற்று அதிரடியாக மடக்கி பிடித்தனர். விசாரணையில் ரகுவரன் அவருக்கு 2வது கணவர் என்பதும்,  சரண்யா, தனது பெயரை மாற்றிக்கொண்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டியதும், இந்தவகையில் தீபனை நான்காவதாக திருமணம் செய்ததும், அதற்கு 2வது கணவர் ரகுவரன் தாய்மாமனாக நடித்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஆத்தூர் சந்தனகிரியை சேர்ந்தவர் சரண்யா (எ) அருஞ்ஜோதி (34). இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு உறவினர்கள் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருடன் இருக்கும்போது, பாலியல் தொழில் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு சில வாலிபர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார். அப்போதுதான், நாமக்கல்லை சேர்ந்த ரகுவரனை 2வதாக திருமணம் செய்துள்ளார். அவர் திருமண மோசடி செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படியே இருவரும் சேர்ந்து சென்னையை சேர்ந்த வாலிபரை பேஸ்புக் மூலம் வலையில் வீழ்த்தி 3வதாக திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர். பிறகு 4வதாக ஆத்தூரில் தீபனை திருமணம் செய்து 30 பவுன், ரூ.2 லட்சத்தை சுருட்டியுள்ளனர். தற்போது இருவரும் சிக்கினர் என தெரிவித்தனர். கல்யாண ராணி சரண்யாவிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. அவர் வேறு யாரிடமெல்லாம் ஏமாற்றினார் என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: