திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 மாணவர்கள் பலியான காப்பகத்தை மூட உத்தரவு; ஆய்வுக்கு பின் அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை

திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்தை மூட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 3 பேர் பலியாகினர். மேலும், வாந்தி, மயக்கத்துடன் 11 மாணவர்கள் மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேற்று அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் 12 பேரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதில் சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி உள்ளிட்டோர் உள்ளனர். காப்பகத்தில் குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை பார்வையிட்டோம். 100 மீட்டர் தாண்டிதான் கழிவறை இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் இரவு நேரத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அங்கு காப்பாளர் யாரும் இல்லை. பெற்றோர் இல்லாத குழந்தைகள் விஷயத்தில் காப்பக நிர்வாகிகள் அஜாக்கிரத்தையோடு, மெத்தனப்போக்கோடு இருந்ததால் இப்படியொரு துயரச்சம்பவம் நடந்துள்ளது. எனவே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்துக்கு மாற்றப்படுவார்கள். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. காப்பக நிர்வாகியும், கண்காணிப்பாளருமான செந்தில்நாதன் மீது சட்டப்படி, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சித பிரியா ஏற்கனவே ஆய்வு செய்தபோது கான்கிரீட் கட்டிடம் இருந்தும், குழந்தைகள் தகர ஷீட் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டது தெரிந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், அவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்று  13 ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளன. அவையும் திடீர் ஆய்வு செய்யப்படும். மாணவர்கள் பலியானதற்கு காரணம் காய்ச்சலா அல்லது உணவா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களை அரசு இல்லங்களில் தங்க வைத்து, கல்லூரி வரை படிக்க உரிய உதவி செய்யப்படும். அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு அரசு உடன் நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: